இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் சுகாதார, மின்சாரத் துறைகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தடை விதித்துள்ளார்.
சுகாதாரத்துறை ஊழியரணி நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் ஆறாவது நாளாக நடைபெற்றன. இதனால் அரசாங்க மருத்துவமனைகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு வரையப்பட்ட சட்டத்தை அதிபர் ராஜபக்சே நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இதன்படி சுகாதார, மின்சாரத் துறைகளில் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளும் அரசாங்கச் சேவைகளாக வகைப்படுத்தப்படும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்தது. இந்தச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்ய மறுப்போரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் நீதிமன்றங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ஆர்ப்பாட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கடந்த வியாழக்கிழமையன்று சுகாதாரத் துறை ஊழியரணிக்கு நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஊழியரணி அதை நிராகரித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி சார்ந்த நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கி வருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சம்பளம், தொழிலில் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றைத் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று அந்நாட்டின் ஊழியரணி குரல் கொடுத்து வருகிறது.
ஊழியரணியின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் மறுத்து வருகிறது. ஊழியர்களின் சம்பளத்திற்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்கப் பொருளியல் நிலவரம் சாதகமாக இல்லை என்பது அரசாங்கத்தின் வாதம்.
இதனால் ஆயிரக்கணக்கான சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெப்ப மின் ஆலை ஒன்றை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கத் திட்டமிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மின்சாரத்துறை ஊழியர்களும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கப்போவதாகக் கூறி வருகின்றனர்.

