அதிகரித்துவரும் சுகாதாரச் செலவுகளைச் சமாளிக்கவும் நோயாளிகளின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்கவும் நோய்த் தடுப்புப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் திரு ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டுக்குள் சுகாதாரத்துக்கான செலவு மும்மடங்காகி சுமார் 60 பில்லியன் வெள்ளியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நாள்பட்ட நோய்க்கு ஆளாவதைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது பெரிய அளவில் உதவக்கூடும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
"நாள்பட்ட நோய்கள் அல்லது மோசமான நோய்கள் ஆகியவற்றுக்கு உள்ளாவதைத் தவிர்த்தால் நாம் ஆரோக்கியமாக முதுமையடைவோம், வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
"நமது குடும்பம் மீதுள்ள சுமை கணிசமாகக் குறையும், ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பு மேலும் சுமுகமாக இயங்கும், நமது தேசத்தின் நிதிவளம் இன்னும் சீராக இருக்கும்," என்றார் திரு ஓங். இவ்வாண்டு நோய்த் தடுப்புப் பராமரிப்பு சுகாதார அமைச்சுக்கு முக்கிய அம்சமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் குறித்த மேல் விவரங்கள் சுகாதார அமைச்சின் செலவினம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவிக்கப்படும். வரும் வெள்ளிக்கிழமையன்று இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த விவாதம் நடைபெறும்.
'உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸ்' எனும் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்திற்கான கட்டுமானப் பணிகளின் அடிப்படை வடிவம் நிறைவடைவதைச் சித்திரிக்கும் சடங்கில் கலந்துகொண்டபோது திரு ஓங் பேசினார். அங்கு அமையும் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் மொத்தம் 1,800 படுக்கைகள் இருக்கும்.
உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தை இவ்வாண்டு திறக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட மனிதவளப் பற்றாக்குறை காரணமாகக் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன. இந்த வளாகம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரை வேலைக்கு எடுப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் சுகாதாரப் பராமரிப்புக்கு அதிகம் செலவு செய்வதாகத் திரு ஓங் சுட்டினார்.
"நமது மக்கள்தொகை தொடர்ந்து மூப்படைவதால் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்," என்று அவர் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்று சம்பவங்கள்
இதற்கிடையே, அண்மைக் காலமாக கொவிட்-19 கிருமித்தொற்று சம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஓர் எதிர்பாரா நிகழ்வு அல்ல என்பதையும் அமைச்சர் ஓங் சுட்டினார். ஆகக் கடைசி நிலவரப்படி இம்மாதம் இரண்டு நாள்களில் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 13,000ஐத் தொட்டது.
"ஓமிக்ரான் வகை கிருமி வேகமாகப் பரவக்கூடியது, அதனால் ஒரு நாளைக்குப் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 15,000லிருந்து 20,000 அல்லது அதற்கும் அதிகமாகப் பதிவாகலாம் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.
"இதுவரை சில நாள்களில் எண்ணிக்கை சுமார் 10,000ஆகப் பதிவானது, இது சமாளிக்கக்கூடியதே," என்று அவர் சொன்னார்.
ஒட்டுமொத்த கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை சிங்கப்பூரின் நிலையை ஓரளவு எடுத்துக்காட்டுகிறது. எனினும், சுகாதாரப் பராமரிப்பைப் பாதிக்கும் புள்ளி விவரங்கள்தான் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைத் திரு ஓங் குறிப்பிட்டார். அந்த வகையில் 21 நோயாளிகள் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர், 128 பேருக்குத்தான் செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது.

