அடுத்த மாதம் முதல் தேதிக்குள் மலேசியாவின் எல்லைகளை முழுமையாகத் திறப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தெரிவித்துள்ளார்.
'என்ஆர்சி' எனும் மலேசியாவின் தேசிய மீட்பு அமைப்பு அந்தப் பரிந்துரையை முன்வைத்திருந்தது. அது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்னமும் ஆலோசனை வழங்கவில்லை என்று திரு இஸ்மாயில் கூறினார்.
"மக்களின் உடல்நலம், சுற்றுப்பயணத் துறை ஆகிய இரண்டையும் பாதுகாக்கவேண்டும், அதனால் நன்கு ஆராய்ந்து அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சுகாதார அமைச்சு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கும்.
"தற்போதைக்கு நமது எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை," என்று திரு இஸ்மாயில் சொன்னார். தேவான் புத்ரா பாடாங் லெரெக் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் பேசினார்.
அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்தே மலேசியாவின் எல்லைகளை முழுமையாகத் திறந்துவிடுவதற்கு தேசிய மீட்பு அமைப்பு அரசாங்கத்திடம் பரிந்துரைத்ததாக அதன் தலைவரும் முன்னாள் மலேசியப் பிரதமருமான முகைதீன் யாசின் கூறியிருந்தார்.
இந்தப் பரிந்துரைப்படி மலேசியா செல்லும் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. மலேசியாவிற்குப் புறப்படுவதற்கு முன்னரும் அந்நாட்டிற்குள் நுழைந்த பிறகும் பயணிகள் கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று திரு முகைதீன் குறிப்பிட்டிருந்தார்.
இப்போதைக்கு சிங்கப்பூருக்கு மட்டும்தான் மலேசியா தனது எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளதாகத் திரு இஸ்மாயில் சொன்னார். இரு நாடுகளுக்கும் இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான 'விடிஎல்' பயணப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கொள்ளைநோய்ப் பரவல் சூழலால் சுற்றுப்பயணத் துறை எதிர்நோக்கிவரும் சவால்கள் அரசாங்கத்திற்குத் தெரியும் என்று திரு இஸ்மாயில் கூறினார். அதே வேளையில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளால் மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கக்கூடாது என்பதையும் அவர் சுட்டினார்.
"சுற்றுப் பயணத் துறையில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அத்துறையில் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறும் நண்பர்களையும் எனக்குத் தெரியும். பயணிகளை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டிகள் அத்தகைய பணிகளில் ஈடுபட்டுதான் வருவாய் ஈட்டுவர். இப்போது சுற்றுப்பயணிகள் அறவே இல்லை, அதனால் அவர்களின் வருமானத்திற்கு வழியில்லை," என்று திரு இஸ்மாயில் கூறினார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் அது போதாது என்றும் நிதியுதவித் தொகை 600 ரிங்கிட் மட்டும்தான் என்றும் திரு இஸ்மாயில் தெரிவித்தார்.
"இந்தத் தொகை அவர்களுக்கு உதவ வழங்கப்படுகிறது, ஆனால் எத்தனை காலம் அவர்களால் இதைக் கொண்டு சமாளிக்கமுடியும் என்பது நமக்குத் தெரியவில்லை. அதனால் நாங்கள் எல்லைகளைத் திறந்துவிட வாய்ப்புள்ளது, ஆனால் அவ்வாறு செய்ய சுகாதார அமைச்சின் ஆலோசனை எங்களுக்குத் தேவை," என்று அவர் குறிப்பிட்டார்.
"சுற்றுப்பயணத் துறைக்கு உதவ எல்லைகளைத் திறந்துவிட நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம் என்பது உண்மைதான். அதே வேளையில் மலேசியர்களின் உடல்நலனைப் பாதுகாக்கவும் நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம். இங்கு வரும் பயணிகள் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருந்தால் அது கிருமித்தொற்று சம்பவங்களைக் கணிசமாக அதிகரிக்கச் செய்து நமது மக்களின் சுகாதாரத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும்," என்று திரு இஸ்மாயில் எச்சரித்தார்.

