முன்னதாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஏறக்குறைய 8,000 ஊழியர்கள், கடந்த மாதம் அதைப் போட்டுக்கொண்டனர்.
ஜனவரி 2ஆம் தேதி நிலவரப்படி, ஏறத்தாழ 48,000 ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள், தங்களுக்கு 'தொற்று இல்லை' என்று சான்று காட்டினாலும்கூட, வேலையிடம் திரும்ப ஜனவரி 15ஆம் தேதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியாக தகுதி பெறாதோர் அல்லது 180 நாள்களுக்குள் கொவிட்-19லிருந்து குணமடைந்தோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஏறக்குறைய 40,000 ஊழியர்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மனிதவள அமைச்சு கூறியது. அவர்களில் 6,000 ஊழியர்கள் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியாக தகுதிபெறும் ஊழியர்கள் அதை உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியது.
"முதலிரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஊழியர்கள், கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்," என்று அது கூறியது.


