சிங்கப்பூர் வரும் பயணிகளைப் பரிசோதிக்க ஏஆர்டி கருவிகளின் செயல்திறன் பற்றி ஆய்வு

1 mins read
caa138c0-d5e3-4ef6-93bf-7f72a5af25e8
-

சாங்கி விமான நிலையம் வந்திறங்கும் பயணிகளுக்கான ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளின் செயல்திறனைப் பரிசோதிக்க ஆய்வு ஒன்றை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இதன்மூலம், பயணிகளுக்கு பல்படிய தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) முறைக்குப் பதிலாக ஏஆர்டி முறையை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் முடிவெடுப்பர்.

கடந்த இரு வாரங்களாக சிங்கப்பூர் வந்திறங்கிய பயணிகள் பலர், பிசிஆர் பரிசோதனைக்குப் பிறகு ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளை இலவசமாகப் பெற்றுக்கொண்டனர். சுகாதார அமைச்சு நடத்திவரும் ஆய்வின் ஒரு பகுதியாக அந்தப் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்த மேல்விவரங்கள் அடங்கிய சுற்றறிக்கைகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு தங்களுடைய வீடு அல்லது குறிப்பிட்ட வசிப்பிடத்துக்கு வந்தவுடன், அதே நாள் அவர்கள் ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்தச் சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள இணைப்புமூலம் பரிசோதனை முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எந்தெந்த பிரிவு நாடுகளில் இருந்து வருவோருக்கு ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படுகின்றன அல்லது எவ்வளவு காலத்துக்கு இந்த ஆய்வு நடத்தப்படும் என்பது பற்றி தெரியவில்லை.

சாங்கி விமான நிலையம் வந்திறங்கும் ஒவ்வொரு பயணியும் தற்போது பிசிஆர் பரிசோதனைக்காக $125 செலுத்த வேண்டியுள்ளது. மாறாக, ஏஆர்டி பரிசோதனைக் கருவி ஒன்றின் விலை $5.