சில சிறிய, நடுத்தர நிறுவன மின் செலவு கிடுகிடு உயர்வு

சில சிறிய, நடுத்தர நிறுவன மின் செலவு கிடுகிடு உயர்வு

2 mins read

உல­க­ளா­விய எரி­சக்தி நெருக்­கடி கார­ண­மாக மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் சிங்­கப்­பூ­ரின் சில சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு மின்­சார செலவு 3 முதல் 5 மடங்கு வரை கூடி இருக்­கிறது.

இந்த நிலை­யில், பழைய கட்­ட­ணத்­து­டன் கூடிய ஒப்­பந்­தங்­கள் காலா­வ­தி­யா­வ­தால் இந்த ஆண்டில் மேலும் பல நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தச் சங்­க­டத்­தைப் போக்க எரி­சக்­திச் சந்தை ஆணை­யம் பல நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. என்­றா­லும்­கூட, மின்­சார செலவு கணி­ச­மாக அதி­க­ரிப்­பதால் சில சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் செல­வைச் சிக்­க­னப்­படுத்­தக்­கூ­டும் அல்­லது வாடிக்­கை­யா­ளர்­கள் தலை­யில் கட்­டக்­கூ­டும் என்று நிறு­வ­னங்­களும் சங்­கங்­களும் கூறு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்து உள்­ளது.

தாங்­கள் இதுவரை சந்­தித்­திராத அள­வுக்கு மின்­சாரக் கட்­ட­ணம் தங்­க­ளுக்கு மிக அதி­க­மாகக் கூடி­விட்­டது என்று ஐந்து சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் தெரி­வித்துள்ளன.

அதோடு மட்­டு­மின்றி, நிலை­யான கட்­டண உடன்­பா­டு­களைப் புதுப்­பிக்க போராட வேண்­டிய சூழ்­நிலை­யும் இருக்­கிறது.

கட்­டண உயர்வு கார­ண­மாக ஐந்து மின்­சார சில்­லறை வர்த்­தக நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூர் சந்தையை­விட்டு சென்ற ஆண்டு வெளி­யே­றி­விட்­டன.

இவ்­வே­ளை­யில், மின்­சா­ரத்தை அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­தக்கூடிய தொழில்­து­றை­யைச் சேர்ந்த எல்லா சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நிலை இருப்­ப­தாக சிங்­கப்­பூர் துல்­லி­யப் பொருளி­யல் தொழில்­நுட்­பச் சங்­கத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ஸ்டீ­ஃபன் கோ எதிர்­பார்க்­கி­றார்.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களிடையே ஆக அதி­க­மாக மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நிறு­வ­னங்­கள் கட்­டண உயர்வு கார­ண­மாக பாதிக்­கப்­பட்டுள்ளதாக சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் சங்­கத்­தின் துணைத் தலை­வர் ஆங் யுயிட் தெரி­வித்­தார்.

அதி­க­ளவு மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­கள் நிலை­யான கட்­ட­ணத்­து­டன் கூடிய உடன்­பா­டு­களைச் சில்­லறை வர்த்­தக நிறு­வ­னங்­க­ளு­டன் செய்­து­கொள்ள வேண்­டும்.

அல்­லது மொத்த விற்­பனைச் சந்­தை­யில் இருந்து அவை மின்­சா­ரத்­தைப் பெற வேண்­டும்.

இந்தச் சந்­தை­யில் மின்­சாரக் கட்­ட­ணம் அடிக்கடி ஏறும் இறங்­கும். ஏறத்­தாழ 270,000 சிறிய, நடுத்தர நிறு­வ­னங்­களில் பெரும்­பாலானவை அதிக அள­வு மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை.

கடைத்­தொ­குதி போன்ற வாட­கைக் கட்­ட­டங்­களில் செயல்­படும் நிறு­வ­னங்­கள் விரை­வில் அதிக மின்­சாரக் கட்­ட­ணம் கார­ண­மாக பாதிக்­கப்­ப­டக்­கூ­டும். அல்­லது சொந்­த­மாக சில்­லறை மின்­சார வர்த்­தக நிறு­வ­னங்­க­ளு­டன் உடன்­பாடு செய்­து­கொள்­கின்ற நிலை அவற்­றுக்கு ஏற்­படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

நிலை­யான மின்­சா­ரக் கட்­ட­ணத்­தைக் கொண்ட உடன்­பா­டு­களில் மேலும் பல இந்த ஆண்­டில் காலா­வ­தி­யா­கும் என்­பதே இதற்­கான கார­ணம் என்று திரு ஆங் தெரி­வித்­தார்.

உலக எரிசக்தி நெருக்கடி காரணமாக மூன்று முதல் ஐந்து மடங்கு கட்டணம் அதிகரிப்பு