தமிழ்நாட்டில் கொவிட்-19 கிருமி படிப்படியாக, அதேநேரம் வேகமாகக் குறைந்து வருகிறது.
அந்த மாநிலத்தில் ஏற்பட்ட மூன்றாவது தொற்று அலை முடிவுக்கு வருகிறது என்பதையே இது காட்டுகிறது என்று சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று மாநிலத்தில் புதிதாக தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2,812 என்று அரசாங்கம் தெரிவித்தது.
தமிழகத்தில் பிப்ரவரி முதலே தொற்று வேகமாக ஒடுங்கி வருவதாகவும் மரணங்களும் பெரிதும் குறைந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட்-19 நோயாளிகளுக்காக 1.33 லட்சம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவற்றில் 2.6 விழுக்காடு படுக்கைகள் கூட நிரம்பவில்லை.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 விழுக்காட்டு அளவுக்கு மட்டுமே நோயாளிகள் இருக்கிறார்கள்.
தடுப்பூசி இயக்கமும் பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றுவதுமே இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் என்று மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாநிலத்தில் சனிக்கிழமை நடந்த 22வது தடுப்பூசி முகாம்கள் மூலம் 7.36 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.
தமிழ்நாட்டில் சனிக்கிழமை நிலவரப்படி 91.7% மக்கள் முதல் தவணை ஊசியைப் போட்டுள்ளனர்.
இரண்டாவது தவணை ஊசியையும் போட்டுக்கொண்டவர்கள் 71.32%. மாநிலத்தில் இதுவரை 21 முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
அவற்றின் மூலம் 9 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத் துறை குறிப்பிட்டது.
தொற்று வேகமாக குறைவதால் பல கட்டுப்பாடுகளும் கிடுகிடுவென அகற்றப்பட்டு மாநிலத்தில் ஏறக்குறைய வழக்கநிலை திரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.

