தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூழ்நிலை அனுமதிக்கும்போது கூடுதல் நாடுகளுக்கு 'விடிஎல்' விரிவுபடுத்தப்படும்: துணைப் பிரதமர்

1 mins read
3348b994-6a58-4aed-b031-e3533a21be03
சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2022 தொடக்க விழாவில் உரையாற்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறந்துவிடுவதில் கடப்பாடு கொண்டிருப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் திங்கட்கிழமை (பிப்ரவரி 14) கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொவிட்-19 தொற்று அதிகரித்த போதிலும், 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைகள் (விடிஎல்) தொடர்ந்து நடைமுறையில் இருப்பது, இந்தக் கடப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

சூழ்நிலை அனுமதிக்கும்போது கூடுதலான நாடுகளுக்கு 'விடிஎல்' பயணப் பாதைகளை சிங்கப்பூர் விரிவுபடுத்தும் என்று திரு ஹெங் கூறினார்.

"தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, பல நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. உலகளவில் விமானப் பயணங்களைத் தொடர்வதில் தன்னுடைய பங்கை ஆற்றுவதில் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது," என்று அவர் விவரித்தார்.

சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2022 தொடக்க விழாவில் பேசியபோது திரு ஹெங் இவ்வாறு கூறினார். சிங்கப்பூர் அதன் பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடர்வதில் அது கொண்டுள்ள கடப்பாட்டிற்கு விமானக் கண்காட்சியை ஓர் உதாரணமாக சுட்டினார் அவர்.