சிங்கப்பூர் தனது பொருளியலையும் எல்லைகளையும் மற்ற நாடுகளுக்கு மீண்டும் திறந்துவிட கடப்பாடு கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொவிட்-19 தொற்று பெருகி வந்தாலும், தனிமைப்படுத்திகொள்ளத் தேவை இன்றிச் சென்றுவரும் வகையில் 20க்கு மேற்பட்ட நாடுகளுடன் தடுப்பூசி போட்டோருக்கான பயணப்பாதைத் திட்டத்தைச் (விடிஎல்) செயல்படுத்தி இருப்பது சிங்கப்பூரின் கடப்பாட்டை எதிரொளிப்பதாக உள்ளது என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
நிலைமை அனுமதித்தால் மேலும் பல நாடுகளுக்கு விடிஎல் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.
"தடுப்பூசிகள், கூடுதல் தடுப்பூசிகளைப் போட்டு வருவதால் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. அனைத்துலக விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவதில் சிங்கப்பூர் தன் பங்கை ஆற்ற கடப்பாடு கொண்டுள்ளது," என்றார் திரு ஹெங்.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2022 தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், எல்லைகளை மீண்டும் திறப்பதில் சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டிற்கு அந்நிகழ்ச்சியை மற்றோர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று காரணமாக முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் விமானக் கண்காட்சி இம்முறை சிறிய அளவில் இடம்பெறுகிறது.
எனினும், சிங்கப்பூரில் கொவிட்-19 பரவத் தொடங்கிய பிறகு இடம்பெறும் ஆகப் பெரிய வர்த்தக நிகழ்வு இதுதான்.
விமானம் மற்றும் வான்வெளித் துறைகளின் நீண்டகால வளர்ச்சியில் சிங்கப்பூர் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் முக்கியமான நிகழ்வு இந்த விமானக் கண்காட்சி என்று துணைப் பிரதமர் சுட்டினார்.
"இன்று நாம் எடுக்கும் முயற்சிகள் இப்போதைய விமானப் பாதையை வரையறுப்பதோடு மட்டுமின்றி, அடுத்த 10-20 ஆண்டுகளுக்கான பாதையையும் வகுக்கும்," என்றார் பொருளியல் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங்.
கொரோனா பெருந்தொற்றுச் சூழலில், விமானம் மற்றும் வான்வெளித் துறைகளில் வேலைகளைப் பாதுகாக்கவும் அவற்றின் செயல்திறன்களைப் பாதுகாக்கவும் அரசு ஒரு பில்லியன் வெள்ளிக்குமேல் செலவிட்டுள்ளது.
இந்நிலையில், அத்துறைகளுக்கான உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என்று திரு ஹெங் தெரிவித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, செங்குத்தாக மேலே உயர்ந்து பறக்கும், தரையிறங்கும் திறன்கொண்ட 'பறக்கும் டாக்சி'களைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
"இந்தப் புதிய தொழில் துறையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கப்பூரில் பறக்கும் டாக்சிகளை முன்னோட்ட முறையில் சோதித்துப் பார்க்கும் சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறோம். அது 'கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரண்ட்' பகுதியில் இடம்பெற வாய்ப்புள்ளது," என்றார் துணைப் பிரதமர்.
கொவிட்-19 பெருந்தொற்றைக் கடந்துவர விமான, வான்வெளித் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நேற்று மாலை நடந்த இன்னொரு நிகழ்ச்சியில், வான்வெளித் துறை சிங்கப்பூரின் ஒரு முக்கியமான துறையாகத் தொடர்ந்திருக்கும் என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று சவாலாக இருந்தாலும் அத்துறை மீண்டு எழுவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு வான்வெளித் துறை 8.8% வளர்ச்சி கண்டது.
"கொவிட்-19 தொற்றில் இருந்து நாம் மீண்டுவருவதாலும் விமானப் போக்குவரத்திற்கான தேவை உயர்ந்து வருவதாலும் வான்வெளித் துறை எழுச்சி பெற்று, கிருமிப் பரவலுக்குப் பிந்திய காலத்தில் செழிப்புறும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று திரு டான் சொன்னார்.

