சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள் அதிகரிப்பு
சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அம்மாணவர்களைப் பராமரித்து வரும் குடும்பங்களுக்கு, அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் ஆதரவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
அம்மாணவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் மேம்பட்ட வழிகளில் உதவ புதிய யோசனைகளை முயன்று பார்க்க அரசாங்கம் ஆயத்தமாகி வருகிறது என்று அமைச்சர் சான் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
குழந்தைகளுக்காக பள்ளிகளிலும் சிறப்புக் கல்விப் பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ள பல்வேறு ஆதரவுத் திட்டங்களை அவர் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
சென்ற மாதம் 11 வயது இரட்டையர்கள் அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கால்வாய் ஒன்றில் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர். அவர்கள் சிறப்புத் தேவை உடையவர்கள் என நம்பப்படுகிறது. தம் மகன்களில் ஒருவரைக் கொன்றதாகக் கூறி, அவர்களின் தந்தைமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறப்புத் தேவை உடைய பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கைகளை அதிகப்படுத்தும்படி பொதுமக்களுக்கு அமைச்சர் சான் வலியுறுத்தியுள்ளார்.
"சிறப்புத் தேவையுடைய குழந்தைகளும் முடிந்த அளவு தற்சார்புடன் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழச் செய்வதே நமது இலக்கு," என்றார் அவர்.
பள்ளிகளில் இலேசான சிறப்புக் கல்வி தேவைகளுடன் கூடிய கிட்டத்தட்ட 27,000 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர் என்றும் 22 சிறப்புக் கல்விப் பள்ளிகளில் மிதமானது முதல் அதிக சிறப்புத் தேவையுடைய ஏறக்குறைய 7,000 மாணவர்கள் உள்ளனர் என்றும் திரு சான் குறிப்பிட்டார்.
சிறப்புக் கல்விப் பள்ளிகளில் பிள்ளைகளின் வளர்ச்சி பற்றி தகவல் பரிமாற ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் அணுக்கமாக இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மூவாண்டுகளில் சிறப்புத் தேவை பிள்ளைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5% கூடிவிட்டது என்றும் அதிகரித்துவரும் விழிப்புணர்வே இதற்குக் காரணம் என்றும் திரு சான் சொன்னார்.

