பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்திய அரசாங்கம் 54 சீனச் செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.
"அந்த 54 செயலிகளும் பயனர்களின் முக்கியமான தகவல்களைச் சேகரிக்கின்றன. அந்த நிகழ்நேரத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் இன்னொரு நாட்டில் உள்ள தரவுச் சேவையகங்களுக்கும் அவை அனுப்பப்படுகின்றன," என்று இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
ஸ்வீட் செல்ஃபி எச்டி, பியூட்டி கேமரா, கரீனா ஃபிரீ ஃபயர், விவா வீடியோ எடிட்டர், ஆன்மயோஜி அரீனா, ஆப்லாக், டூவல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுகின்றது.
இவற்றுள் ஃபிரீ ஃபயர் செயலியானது சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்ட 'சீ லிமிடெட்' நிறுவனத்தின் முக்கிய இணைய விளையாட்டு. 'சீ லிமிடெட் ' நிறுவனர்கள், சீனாவில் பிறந்து, பின்னர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் இணைய விளையாட்டு மற்றும் இணையவழி வணிகத்தில் கவனம் செலுத்திவரும் அந்நிறுவனம், சீனாவை மையமாகக் கொண்ட 'டென்சென்ட்' நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஃபிரீ ஃபயர் விளையாட்டிற்கு இந்தியாவின் தடை குறித்து 'சீ லிமிடெட்' நிறுவனம் இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை.
முன்னதாக, இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, இந்தியர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டிக்டாக் செயலி உட்பட 59 சீனக் கைபேசிச் செயலிகளுக்கு 2020 ஜூன் மாதம் இந்திய அரசு தடை விதித்தது.
அதன்பின் அதே ஆண்டு ஆகஸ்ட்டில் 47 செயலிகளுக்கும் செப்டம்பரில் 118 செயலிகளுக்கும் நவம்பரில் 43 செயலிகளுக்கும் இந்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது.
ஒட்டுமொத்தத்தில், கடந்த 2020 மே மாதம் முதல் சீனாவுடனான எல்லையில் பதற்றநிலை நிலவி வருவதை அடுத்து, இந்தியா இதுவரை 321 சீனச் செயலிகளுக்கு தடை விதித்திருக்கிறது.

