நான் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன்: டென்னிஸ் நட்சத்திரம் விடாப்பிடி

நான் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன்: டென்னிஸ் நட்சத்திரம் விடாப்பிடி

2 mins read
66ec560c-ec1c-4dc4-9f94-a4e7cf2c7b2a
படம்: ராய்ட்டர்ஸ் -

டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச், கொவிட்-19 தடுப்பூசிக்கு எதிரான தமது நிலைப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வலுக்கட்டாயப்படுத்தப்படுவதைவிட பெரிய டென்னிஸ் போட்டிகளில் பங்கெடுப்பதை விட்டுக்கொடுப்பதே மேல் என்று இவர் கூறினார்.

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு ஜோக்கோவிச், 34, அளித்த பிரத்தியேக நேர்காணலில் இந்தக் கருத்தை முன்வைத்தார். பிபிசி நிறுவனம் அச்செய்தியை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 15) அதன் இணையத்தளத்தில் வெளியிட்டது.

இதுவரை இருபது 'கிராண்ட் ஸ்லாம்ஸ்' பட்டங்களை ஜோக்கோவிச் வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர், ரஃபாயல் நடால் ஆகியோருடன் இவர் சமநிலையில் இருந்தார்.

செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோக்கோவிச்சின் தடுப்பூசி நிலை தொடர்பில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இவரது விசாவை கடந்த மாதம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து இவர் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய பொது விருதுப் போட்டியில் ஜோக்கோவிச் பங்கேற்காதது, நடாலுக்குச் சாதகமாக அமைந்தது. அப்போட்டியை வென்ற நடால், 21 'கிராண்ட் ஸ்லாம்ஸ்' பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைத் தேடிக்கொண்டார்.

இந்நிலையில், பிரெஞ்சு பொது விருதுப் போட்டி, விம்பிள்டன் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் பங்கேற்பதை விட்டுக்கொடுக்க தாம் தயாரா என்று தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோக்கோவிச்சிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த இவர், "ஆமாம். அதற்கான விலையைச் செலுத்த நான் தயாராக இருக்கிறேன்," என்றார்.

உலகத் தரவரிசையில் முதல் நிலையில் உள்ள ஜோக்கோவிச், சிறுவர் பருவத்தில் தாம் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டதாகக் கூறினார்.

"நான் தடுப்பூசிக்கு எதிராக இருந்ததே கிடையாது. என்றாலும், உடலில் எதைச் செலுத்திக்கொள்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்திற்கு நான் எப்போதும் ஆதரவளித்துள்ளேன்.

"ஏனென்றால், எனது உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பதற்கான கோட்பாடுகள், எந்தவொரு விருதையும் அல்லது பட்டத்தையும்விட முக்கியமானவை," என்று ஜோக்கோவிச் விவரித்தார்.

எதிர்காலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து தாம் "திறந்த மனப்பான்மையுடன்" இருப்பதாக இவர் கூறினார்.

"ஏனென்றால், கொவிட்-19 சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிகச்சிறந்த தீர்வை நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தேடுகிறோம்," என்றார் ஜோக்கோவிச்.

குறிப்புச் சொற்கள்