கடந்த ஆண்டு ஏறக்குறைய 2,200 கட்டுமான நிறுவனங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டன. இந்த எண்ணிக்கை, 2018க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்ட நிறுவனங்களின் சராசரி எண்ணிக்கையுடன் ஒப்பிடத்தக்கது.
தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 15) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
2018ல் 2,187 நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டன. 2019ல் 2,347 நிறுவனங்களும் 2020ல் 2,027 நிறுவவனங்களும் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாக திரு டான் தெரிவித்தார்.
இவ்வாண்டு கட்டுமானத் தேவை $27 பில்லியனுக்கும் $32 பில்லியனுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் முன்னுரைத்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் மனிதவளப் பற்றாக்குறை, மூலப்பொருள் செலவு அதிகரிப்பு, ரொக்கப் புழக்கம் ஆகிய விவகாரங்களைக் கட்டுமானத் துறை சமாளித்து வந்துள்ளது.
செலவு நெருக்குதல்களைச் சமாளிக்க கட்டுமான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்கள் உதவியுள்ளதாக திரு டான் குறிப்பிட்டார். கட்டுமான ஆதரவுத் திட்டம், வேலை ஆதரவுத் திட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
இந்நிலையில், கட்டுமானத் துறை மீட்சியடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் சொன்னார்.


