சிங்கப்பூரின் ஆட்சிமுறை திறம்பட செயல்பட நாடாளுமன்ற நிலைப்பாடு மக்கள் மதிக்கத்தக்கதாக இருப்பதோடு மன்ற உறுப்பினர்கள், அவை நடவடிக்கைகள் போன்றவை அவர்களின் நம்பிக்கைக்குரியனவாக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
"மக்களின் நம்பிக்கை சிதைந்தாலும் அதனை இழந்தாலும் ஆட்சிமுறை தோல்வியைத் தழுவும். சிங்கப்பூரின் உயர்ந்த ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைப் பெறாமல் ஆட்சிமுறை செயல்பட முடியாது. எனவே ஜனநாயகமும் அடிப்படைப் பண்புகளும் கட்டிக்காக்கப்பட வேண்டும்," என்றார் அவர்.
முன்னாள் உறுப்பினர் ரயீசா கான் மன்றத்தில் உண்மைக்கு மாறாக பேசியதன் மீதான நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு விசாரணை அறிக்கை தொடர்பான இரண்டு தீர்மானங்கள் மீது நேற்று விவாதம் நடைபெற்றது.
அதில் பங்கேற்றுப் பேசிய திரு லீ, "மன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகள் கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டியதாக உள்ளது.
"இவற்றில், கடினமாக இருந்தாலும் சங்கடமாக இருந்தாலும் எப்போதும் உண்மையே பேசவேண்டும் என்பது முதன்மையானது. சிங்கப்பூருக்குச் சரியானதையே செய்ய வேண்டும்.
"ஏதாவது தவறாக நடந்தால் அல்லது தவறாக நடத்தப்பட்டிருந்தால் நீங்களே அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். மூடி மறைக்காதீர்கள். சுற்றிவளைக்காதீர்கள். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்யைப் பயன்படுத்தாதீர்கள்,
"பொய்யை மீண்டும் மீண்டும் மன்றத்தில் கூறும்போதும் நாடாளுமன்றம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்ற உறுப்பினர்கள் முடிவு செய்ய வேண்டும்.
"பாட்டாளிக் கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களது பிரமாணப் பத்திரங்களில் பொய்யுரைத்திருப்பதை குழு கண்டறிந்திருப்பது பற்றியும் அவர்கள் முடிவு செய்ய வேண்டும்.
"ஒன்றும் நடக்காததுபோல் நாம் பாசாங்கு செய்யலாமா? அல்லது கடினமான பொய் அல்ல என்றும் அது தீங்கிழைக்காதது என்றும் வாதம் செய்து நமது தரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா?
"இவற்றில் எதைச் செய்தாலும் நாமும் சேர்ந்து நாடாளுமன்றத்தை அவமதித்ததாகவும் இழிவு
படுத்தியதாகவும் ஆகிவிடும்," என்று திரு லீ பேசினார்.
குற்றம் நடைபெற்றிருப்பதுபோலத் தோன்றுவதால் திரு சிங்கையும் திரு ஃபைசாலையும் அரசு வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என குழு பரிந்துரைப்பதைத் தாம் வரைவேற்பதாகக் குறிப்பிட்ட திரு லீ, "சிறிய தண்டனைக்கு குழு பரிந்துரைத்திருக்கலாம். ஆனால் அது மிகவும் கடினமான விவகாரத்தை இலேசாகக் கையாண்டதாகக் கருதப்படும்.
"நாம் நமது விதிகளின் தரத்தைக் குறைத்துக் கொண்டதாகிவிடும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொய் பேசுவது ஒன்றும் மோசமான செயலல்ல என்று நாம் சிங்கப்பூரர்களுக்கு சொல்வது போல அமைந்துவிடும்.
"சிங்கப்பூர் உயர்ந்த நம்பிக்கை கொண்ட சமூகமாக இன்றைக்குத் திகழ்கிறது. அதனைக் கட்டிக்காப்பதிலும் தலைவர்களிடத்தில் நற்பண்பு கள் இருப்பதிலும் நாடு உறுதியாக இருக்கிறது.
"பொதுமக்களின் நம்பிக்கையை நாம் அலட்சியப்படுத்தலாகாது. பொய்யை எப்போதும் அனுமதிக்கக்கூடாது. அரசியல் போட்டி அதிகரித்து வரும் சூழலில் எதிர்த்தரப்பினரின் ஆற்றலும் நேர்மையும் கவனிக்கப்படும்.
மக்கள் செயல் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்வரை நாடாளுமன்றத்தில் சரியான விதிமுறைகள் கட்டிக்காக்கப்படுவதற்குத் தேவையானவற்றைச் செய்ய அது தயங்காது. சில விட்டுக்கொடுத்தல்கள் இருக்கலாம். ஆனால் மன்னிக்கமுடியாத நடத்தைக்கு மன்னிப்பு கிடையாது," என்று திரு லீ உரையாற்றினார்.

