சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நடந்த மோசடிகளில் 633.3 மில்லியன் வெள்ளியை பாதிக்கப்பட்டவர்கள் இழந்தனர்.
2020ஆம் ஆண்டு மோசடிகளில் தொலைக்கப்பட்ட 268.4 மில்லியனைவிட இது கிட்டத்தட்ட மும்மடங்கு ஆகும்.
சென்ற 2021ல் நிகழ்ந்த குற்றங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களில் இது தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையினர் புதன்கிழமை (பிப்ரவரி 16) அன்று அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டனர்.
கடந்த ஆண்டு இங்கு காணப்பட்ட மோசடிகளில் குறைந்தது 90 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து நடத்தப்பட்டன.
மோசடிக்காரர்கள் கும்பல்களாக செயல்பட்டனர் என்றும் அவர்களுக்கு நிறைய வளங்கள் இருந்தன என்றும் காவல் துறையினர் கூறினர்.
அதிநவீனத் தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்தினர் என்றும் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
வேலை தொடர்பான 4,554 மோசடிகள் கடந்த ஆண்டு நடந்தன.
தொடர்புடைய செய்திகள்
ஒப்புநோக்க, 2020ல் அத்தகைய 132 மோசடிகள் மட்டும் இடம்பெற்றன.
இந்த உயர்வுக்கு பெருந்தொற்று சூழல் முக்கிய காரணட் என்று சிங்கப்பூர் காவல் துறையின் மோசடி எதிர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் அய்லீன் யாப் கூறினார்.
வேலை இழந்த பலர், குடும்பச் செலவைச் சமாளிக்க பகுதிநேர வேலைகளைத் தேடினர் என்று அவர் குறிப்பிட்டார்.
மோசடிகளைத் தவிர, இணையத்தில் மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றங்களும் பொதுப் போக்குவரத்தில் மானபங்கம் செய்த குற்றங்களும் அதிகரித்தன என்று காவல் துறையினர் கூறினர்.
மோசடிகள் அதிகமான அதே வேளையில் நேரடிக் குற்றச் செயல்கள் 2021ல் குறைந்தன.
கடந்த ஆண்டு மொத்தம் 250 நாள்களில் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை அடித்தல் போன்ற குற்றங்கள் நடக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒப்புநோக்க, 2020ல் 48 நாள்களில்தான் அந்த மூன்று வகையான குற்றங்கள் நடைபெறவில்லை.

