சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டெல்டா வகைக் கிருமிப் பரவல் உச்சத்தில் இருந்தபோது, நாடு தழுவிய தடுப்பூசி நடவடிக்கையால் 8,000 பேரின் மரணங்கள் தவிர்க்கப்பட்டது.
அத்துடன் தடுப்பூசி நடவடிக்கையால் 33,000 பேருக்குக் கொவிட்-19 தொற்றால் கடும் நோய் ஏற்படுவதையும் 112,000 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதையும் தவிர்க்க முடிந்தது.
நிதி அமைச்சு வியாழன் (பிப்ரவரி 17) அன்று வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டது.
பெருந்தொற்றின் பாதிப்பைக் குறைக்க 2020லும் 2021லும் அரசாங்கம் வெளியிட்ட வரவு செலவுத் திட்டங்களின் தாக்கத்தை அந்த அறிக்கை விளக்கியது.
கடந்த ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை, 198,361 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியது. மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால், அதைவிட இருமடங்கு அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்று அறிக்கை கூறியது.
அத்துடன், தற்போதைய எண்ணிக்கையைவிட 11 மடங்கு அதிகமானவர்கள் உயிர் இழந்திருக்கலாம்.
கடும் நோய் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 12 மடங்கு உயர்ந்து இருக்கும்.
மேலும், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாகி இருக்கும்.
நிதி அமைச்சின் அறிக்கை இடம்பெற்ற அந்த புள்ளிவிவரங்களை, சுகாதார அமைச்சு மதிப்பிட்டிருந்தது.
தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றைப் போடாமல் இருந்திருந்தால் மரணம், நோய் போன்றவை எந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை சுகாதார அமைச்சு மதிப்பிட்டது.

