வரும் 2023ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை 55 வயதை எட்டும் உறுப்பினர்களுக்கான மத்திய சேம நிதியின் (மசேநிதி) அடிப்படை ஓய்வூதியத் தொகை ஒவ்வோர் ஆண்டும் 3.5 விழுக்காடு உயர்த்தப்படும்.
ஓய்வுகாலத்தில் மத்திய சேம நிதியிலிருந்து கூடுதல் மாதாந்திரத் தொகை இவர்களுக்குக் கிடைக்கச் செய்வது இதன் நோக்கம்.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று நாடாளுமன்றத்தில் 2022க்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது இதைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு 55 வயதாகும் மசேநிதி உறுப்பினர்களுக்கான அடிப்படை ஓய்வூதியத் தொகை $96,000 ஆகும்.
அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை ஓய்வூதியத் தொகை பின்வருமாறு உயர்த்தப்படும்: - 2023ல் $99,400 - 2024ல் $102,900 - 2025ல் $106,500 -2026ல் $110,200 -2027ல் $114,100
இதன்வழி, 2027ல் 55 வயதாகும் உறுப்பினர்கள் 65 வயதை எட்டும்போது, அவர்களுக்கு தங்கள் மசேநிதியிலிருந்து மாதத்துக்குக் கிட்டத்தட்ட $1,000 கிடைக்கும். இது அவர்கள் வாழ்நாள் வரை தொடரும் என்றார் திரு வோங்.
மசேநிதி உறுப்பினர்கள் ஓய்வுகாலத்தில் தங்கள் அடிப்படை வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் தொகைதான் அடிப்படை ஓய்வூதிய தொகை.
மசேநிதியில் அந்தத் தொகையை எட்ட முடியவில்லை என்றால், உறுப்பினர்கள் அதற்கு ஈடுகட்ட கூடுதல் பணம் நிரப்ப வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றார் அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், 55 முதல் 70 வயது வரையுள்ள ஊழியர்களின் மசேநிதிக் கணக்கில் முதலாளிகளும் ஊழியர்களும் செலுத்தும் விகிதம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்றும் திரு வோங் கூறினார்.


