மலேசியாவில் கடந்த மாதத்தி
லிருந்து 12 வயதுக்கும் குறைவான 50,000க்கும் மேற்பட்ட சிறுவர்
களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று தகவல் வெளியிட்டது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 50,826 சிறுவர்களில் 99.7 விழுக்காட்டினருக்கு அறிகுறிகள் இல்லை அல்லது இலேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இருப்பினும், மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மருத்துவ
மனைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
ஆனால் சற்று கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை இம்மாதம் அதிகரித்திருப்பதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
"கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு ஓமிக்ரான் கிருமி வகை காரணமாக இருக்கலாம். அதே சமயம், பள்ளிகளும் குழந்தை பராமரிப்பு நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் வெளியிடங்களில் சிறுவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் நேற்று தெரிவித்தார்.
பெரியவர்களைக் காட்டிலும் சிறுவர்களுக்குக் கிருமித்தொற்றால் ஏற்படும் பாதிப்பு குறைவு என்றபோதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை சில சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். சில சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சில சிறுவர்களுக்கு மிகக் கடுமையான அழற்சி ஏற்
படுகிறது. இதனால் இதயம், நுரையீரல், மூளை போன்ற உடல் உறுப்பு களில் அழற்சி ஏற்படுகிறது.
"2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 18 வயதுக்கும் குறைந்த 174 சிறுவர்களுக்கு இத்தகைய அழற்சி ஏற்பட்டுள்ளது. அவர்களில் 57 விழுக்காட்டினர் 12 வயதுக்கும் குறைவானவர்கள். அழற்சி காரணமாக மலேசியாவில் இதுவரை ஏழு சிறுவர்கள் மாண்டுவிட்டனர்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம். கொவிட்-19 கிருமித்தொற்றால் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய மிகக் கடுமையான அழற்சியைத் தவிர்க்க அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். ஐந்து வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் ஃபைசர் கொமிர்னாட்டி தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

