4.3% அதிகம் என்றாலும் கொவிட்-19க்கு முந்திய நிலையை இன்னமும் எட்டவில்லை
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பொதுப் போக்குவரத்துப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. என்றாலும், கொவிட்-19 பரவலுக்கு முந்திய நிலவரத்துடன் ஒப்புநோக்க, அது மிகவும் குறைவு தான்.
கடந்த ஆண்டில் நாளொன்றுக்குச் சராசரியாக பேருந்து, ரயில்களில் 5.259 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது, 2020ஆம் ஆண்டைவிட 4.3 விழுக்காடு அதிகம்.
நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
பேருந்துப் பயணங்களில் மிகுந்த உயர்வு காணப்பட்டது. பேருந்துப் பயணங்கள் 4.5 விழுக்காடு கூடி, நாள் ஒன்றுக்கு மூன்று மில்லியனைக் கடந்தன.
பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி), இலகு ரயில் (எல்ஆர்டி) பயணங்கள் 4.1 விழுக்காடு அதிகரித்து, நாளொன்றுக்கு 2.251 மில்லியனாகப் பதிவாயின.
இவ்வாண்டு சிங்கப்பூர் பொருளியல் தொடர்ந்து மீட்சியடையக்கூடும் என்பதால் இன்னும் அதிகமானோர் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பேருந்து, ரயில் பயணங்கள் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 5.785 மில்லியனாகப் பதிவாயின. இது, சென்ற ஆண்டின் அன்றாட சராசரியைவிட 10 விழுக்காடு அதிகம்.
என்றாலும், பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் கொவிட்-19 பரவலுக்கு முந்திய நிலவரத்துக்குத் திரும்ப இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19 பரவத் தொடங்குவதற்குமுன் 2019ல் நாள் ஒன்றுக்கு 7.691 மில்லியனாகப் பதிவானதே பொதுப் போக்குவரத்துப் பயணங்களைப் பொறுத்தமட்டில் ஒருநாள் சாதனை.
இதற்கிடையே, டாக்சி, தனியார் வாடகை கார் பயணங்களும் சென்ற ஆண்டு அதிகரித்தன. அவ்வகையில், நாளொன்றுக்குச் சராசரியாக 553,000 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது, முந்திய 2020ஆம் ஆண்டைவிட 7.2 விழுக்காடு அதிகம்.
தனியார் வாடகை கார் பயணம் 8 விழுக்காடு வளர்ச்சி கண்டு நாளொன்றுக்கு 321,000ஐ எட்டியது. டாக்சி பயணங்கள் 5.9 விழுக்காடு கூடி 232,000ஐத் தொட்டன.
கடந்த ஜனவரி மாதம் டாக்சி, தனியார் வாடகை கார் பயணங்கள் 3.8 விழுக்காடு உயர்ந்து, நாளொன்றுக்கு 574,000ஆக பதிவாயின.
டாக்சி, தனியார் வாடகை கார் பயணங்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை.
முன்னதாக, கடந்த ஈராண்டுகளாகப் பொதுப் போக்குவரத்துப் பயணம் தொடர்பில் பயணிகளிடம் மனநிறைவு குறைந்தது, பொதுப் போக்குவரத்து மன்றத்தின் வருடாந்திரக் கருத்தாய்வு முடிவுகள் மூலம் தெரியவந்தது.
ரயில், பேருந்துப் பயணங்கள் மனநிறைவு அளித்ததாக 2019ல் 99.4 விழுக்காட்டினர் கூறினர். ஆயினும், அவ்விகிதம் 2020ல் 97.6 விழுக்காடாகவும் 2021ல் 92 விழுக்காடாகவும் குறைந்தது.
கடந்த 2015ல் இவ்விகிதம் ஆகக் குறைவாக 91.8 விழுக்காடாகப் பதிவாகி இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

