கிழக்கு உக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்தன
கிழக்கு உக்ரேனில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த டொனட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதிகளைத் தனி நாடுகளாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அங்கீகரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளுக்குள் செல்லும்படி ரஷ்யப் படைகளுக்கு அதிபர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். அங்கு ரஷ்யப் படைகள் அமைதிபேணும் பணிகளில் ஈடுபடும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், அவர்கள் அமைதிபேணுவர் எனக் கூறுவது முட்டாள்தனமானது என்று அமெரிக்கா சாடியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை போருக்கான முகாந்திரம் என்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அதிபர் புட்டினின் அங்கீகரிப்பைத் தொடர்ந்து, டொனட்ஸ்க், லுகான்ஸ்க் வட்டாரங்களில் அமெரிக்கர்கள் புதிதாக முதலீடு செய்யவும் வர்த்தகம் புரியவும் தடை விதிக்கும் செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
இவ்விவகாரத்தில் உக்ரேனுடன் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இணைந்து செயல்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்தது.
ரஷ்யாமீது பொருளியல் தடைகளை விதிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
பிரிட்டன் உடனடியாகப் பொருளியல் தடைகளை விதிக்கும் என்றும் அவை ரஷ்யாவைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார்.
அமைதிபேணும் பணிகளுக்காக ரஷ்யப் படைகள் அவ்விரு பகுதிகளுக்குள் செல்வதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
அதிபர் புட்டினின் அறிவிப்பிற்குமுன், ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் சோல்சும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனும் அவரிடம் பேசினர்.
இந்நிலையில், எதனைக் கண்டும் எவரைக் கண்டும் தம் நாடு அஞ்சாது என்று உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான அரசதந்திர உறவுகளை உக்ரேன் முறித்துக்கொள்ளக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க மதிப்பீட்டின்படி, உக்ரேன் எல்லையில் ஏறக்குறைய 150,000 படைவீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதனால், அங்கு எந்நேரமும் போர் மூளலாம் என்ற அச்சம் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவின் 'தனி நாடுகள்' அங்கீகரிப்பைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் நேற்று அவசரமாகக் கூடியது.
தனது படைகள் அமைதிபேணும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று ரஷ்யா சொல்வதை ஏற்க மறுத்த ஐநாவிற்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், "உண்மையில் அவை என்னவென்று எங்களுக்குத் தெரியும்," என்றார்.
அவ்விரு பகுதிகளைத் தனி நாடுகளாக அங்கீகரிப்பதாகக் கூறுவது, உக்ரேன்மீது படை எடுக்க ரஷ்யா உருவாக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய ஆண்டுகளாக, டொனட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த பலருக்கு ரஷ்யக் கடப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக 'பிபிசி' செய்தி கூறுகிறது.
கடந்த வாரம் முதல் அவ்விரு பகுதிகளில் இருந்தும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வெளியேற்றப்பட்டு, ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அதிபர் புட்டின் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில், ரஷ்ய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக உக்ரேன் விளங்கியது என்றும் கிழக்கு உக்ரேனை பண்டைய ரஷ்யப் பகுதி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பேச்சுவார்த்தைமூலம் தீர்வு: சிங்கப்பூர் வலியுறுத்து
உக்ரேன் நெருக்கடியில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வை எட்ட வேண்டும் என்று சிங்கப்பூர் வலியுறுத்தி இருக்கிறது. "உக்ரேன் - ரஷ்யா எல்லையில் அதிகரித்துவரும் பதற்றநிலையாலும் பிரிந்து சென்ற இரு உக்ரேனிய வட்டாரங்களை அங்கீகரிக்கும் ரஷ்யாவின் முடிவாலும் சிங்கப்பூர் பெரிதும் கவலை அடைந்து உள்ளது. உக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், ஆட்சி எல்லைகள் ஆகியவை மதிக்கப்பட வேண்டும்," என்று வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து முதல் விமானம் புறப்பட்டது
உக்ரேனில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப அழைத்துவரும் நோக்கில், ஏர் இந்தியாவின் முதல் விமானம் நேற்றுக் காலை அந்நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றது. 200 இருக்கைகள் கொண்ட அவ்விமானம் நேற்று நள்ளிரவு புதுடெல்லியை வந்தடையும் என்று சொல்லப்பட்டது. நாளையும் வரும் 26ஆம் தேதியும் மேலும் இரு ஏர் இந்தியா விமானங்கள் உக்ரேன் செல்லும். உக்ரேனில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் நலமாக இருப்பது முக்கியம் என்றும் ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இந்தியப் பேராளர் டி.எஸ்.திருமூர்த்தி கூறினார்.

