இந்தியாவில் ஈராண்டுகளுக்குப் பிறகு, அடுத்த மாதத்தில் இருந்து வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனையடுத்து, வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்துச் சுகாதார அமைச்சுடன் ஆலோசித்த விமானப் போக்குவரத்து அமைச்சு, அதன் தொடர்பில் உறுதியானதொரு முடிவிற்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஆயினும், விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
"வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மார்ச் 15ஆம் தேதியில் இருந்து தொடங்கப்படலாம். அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கென இந்திய விமான நிலையங்களில் பின்பற்றப்படும் வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும்," என்று அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுவதாக 'என்டிடிவி' செய்தி வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 28ஆம் தேதிவரை வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அத்தகைய விமானச் சேவைகள் கடந்த 2020 மார்ச் 23ஆம் தேதியிலிருந்து இயக்கப்படுவதில்லை.
இருதரப்புச் சிறப்பு ஏற்பாடுகள்மூலம் 2020 ஜூலை மாதத்தில் இருந்து இந்தியாவிற்கும் 40 நாடுகளுக்கும் இடையே பயணிகள் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சுகாதார அமைச்சின் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இம்மாதம் 14ஆம் தேதி நடப்பிற்கு வந்தது. ஏழு நாள்கள் கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதும் எட்டாம் நாளில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டியதும் ரத்து செய்யப்பட்டது.
வெளிநாட்டுப் பயணிகள் பயணத்தைத் தொடங்குவதற்குமுன் 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அவர்கள் பதிவேற்றம் செய்யலாம்.
அத்துடன், தொற்று அபாயமுள்ள நாடுகளின் பட்டியலும் அகற்றப்பட்டது.

