உக்ரேன் பிரச்சினை நாளுக்கு நாள் முற்றி வரும் நிலையில், அந்த நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அவசரநிலை 30 நாள்களுக்கு நடப்பில் இருக்கும் என்றும் அதை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதோடு, ரஷ்யாவில் வசிக்கும் உக்ரேனியர்கள் பாதுகாப்பாக உடனடியாக வெளியேறிவிட வேண்டும் என்று உக்ரேன் கேட்டுக்கொண்டது.
முன்னாள் ராணுவ வீரர்களையும் உக்ரேன் திரட்டி வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வைத்துக்கொள்ள அனுமதிக்கும் மசோதா ஒன்றை முதல்வாசிப்புக்கு தாக்கல் செய்ய அந்நாட்டின் நாடாளு மன்றம் நேற்று வாக்களித்தது.
உக்ரேன் நிலவரம் பற்றி ஐநா பொதுப் பேரவை நேற்று விவாதிக்க இருந்தது. ரஷ்யப் படைகள் உக்ரேன் எல்லைகளை நோக்கி மேலும் நெருங்குவதாக தெரிவிக்கப்படும் சூழலில் இந்நிலவரங்கள் இடம்பெற்றன.
உக்ரேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை ரஷ்யா தொடங்கி விட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததற்குச் சில மணி நேரங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டார்.
ரஷ்யா எப்போதுமே நேரடியான, நேர்மையான பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறது என்றும் அதே நேரத்தில் தன் ராணுவத்தின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் அந்தக் காணொளியில் புட்டின் தெரிவித்தார்.
ரஷ்யாவின் நலன்களும் பாதுகாப்பும் பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டவை என்றார் அவர்.
உக்ரேன் மேற்கு ஐரோப்பாவில் சேர்வதை எதிர்க்கும் ரஷ்யா, உக்ரேனுடன் செய்துகொண்ட அமைதி உடன்பாட்டுக்குப் புறம்பாக இரு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீ கரித்தது. அங்கு அமைதி பணியில் ரஷ்ய ராணுவம் ஈடுபடும் என்று அதிபர் புட்டின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா முதலான நாடுகளும் ரஷ்யா மீது தொடர்ச்சியாக பல தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யாவில் இருந்து வரும் இரண்டு எரிவாயுத் திட்டங்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை ஜெர்மனி நிறுத்திவிட்டது.
அதிபர் புட்டின் உக்ரேன் மீதான தனது பிடியை இறுக்கினால், ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகள் நடப்புக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்து இருக்கிறார்.
அரசதந்திர பேச்சுக்கு ரஷ்யா தயார் என்று அதிபர் புட்டின் தெரிவித்து இருந்தாலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை பிரான்ஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் ரத்து செய்துவிட்டார்கள்.
ரஷ்ய துருப்புகள் உக்ரேன் எல்லைக்குள் இனிமேல்தான் நுழைய வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் மேற்கு ரஷ்யா விலும் உக்ரேன் எல்லை அருகி லும் புதிய படைகளும் ராணுவத் தளவாடங்களும் குவிக்கப்படுவதை அமெரிக்கத் துணைக்கோள படங்கள் காட்டுகின்றன.

