பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் சிலவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் கூடுதல் நேரம் வேலை பார்க்கத் தோதாக ஊழியர்களை அமர்த்துகிறார்கள்.
ஊழியர்களையும் அவர்கள் புதிதாக வேலைகளில் சேர்க்கிறார்கள். இதன்மூலம் அதிக நேரம் செயல்பட்டு இதர சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் சுமையைக் குறைக்க அவர்கள் முயல்கிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள இத்தகைய குறிப்பிட்ட மருந்தகங்கள் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதிவரை வார நாள்களில் இரவு 11 மணிவரை செயல்படும்.
வார இறுதி நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வார முடிவு இரவு நேரத்திலும் செயல்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
தனியார் மருந்தகங்களில் கூடும் நோயாளிகளைப் பல மருந்தகங்களுக்கும் பிரித்துவிட்டு சுமையைக் குறைக்கும் முயற்சியாக இந்த ஏற்பாடு இடம்பெறுகிறது.
ஆரம்ப பராமரிப்பு மருத்துவரை பார்க்கும்படி மருத்துவக் கவனிப்பு தேவைப்படுவோருக்கு அமைச்சு ஆலோசனை தெரிவித்திருந்தது.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் போக வேண்டாம் என்றும் அவர்களுக்கு அமைச்சு ஆலோசனை கூறியது.
இந்நிலையில், சில பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் அதிக நேரம் செயல்பட முடிவு செய்தன. இதன்மூலம் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் சுமை குறையும்.
மருந்தகங்கள் குறித்த மேல்விவரங்களை flu.gowhere.gov.sg என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வேளையில், தெம்பனிஸ் சீமெய், பிடோக் குடியிருப்புப் பேட்டைகளில் செயல்படும் 15 மருந்தகங்களில் நேற்று ஏறத்தாழ ஐந்து முதல் 10 நோயாளிகள் காத்து இருந்ததை தான் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
தெம்பனிசில் செயல்படும் பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகமான 'ஹெல்த்வே மெடிக்கல் சென்டர்' என்ற மருந்தகத்தில் பலரும் சிகிச்சைக்காக காத்து இருந்தனர். அந்த மருந்தகத்தில் உள்ள நோயாளிகள் காத்திருக்கும் பகுதிக்கு அப்பாலும் பலரும் அங்கு இருந்ததைக் காண முடிந்தது.
இதனிடையே, சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவில் கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக 26,032 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
இதற்கு முன் இம்மாதம் 15ஆம் தேதியன்று ஆக அதிகமான எண்ணிக்கையில் 19,420 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
மொத்தம் 1,608 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த திங்கட்கிழமையன்று பதி வான எண்ணிக்கையைக் காட்டிலும் இது சற்று அதிகம்.
46 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். 190 நோயாளிகளுக்குச் செயற்கை சுவாச உதவி தேவைப்பட்டது.
கிருமித்தொற்றுக்கு ஆளான நால்வர் மரணமடைந்தனர்.

