எது நடக்கக்கூடாது என்று உலக நாடுகள் நினைத்தனவோ அது நடந்துவிட்டது.
நீண்டநாள் பதற்றநிலைக்குப் பிறகு உக்ரேனை ரஷ்யா நேற்று தாக்கத் தொடங்கியது. எப்படியாவது ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புட்டினின் மனதை மாற்றி, பேரழிவைத் தவிர்த்துவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த உலக நாடுகள் அதிர்ச்சி யில் உறைந்துள்ளன.
தொடங்கிய சில மணி நேரத்திலேயே பலரின்
உயிரைப் பறித்துவிட்ட இந்தக் கடுமையான மோதல் எங்கு போய் முடியுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
உக்ரேனின் கிழக்குப் பகுதி யில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகச் சிறப்பு ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக அதிபர் புட்டின் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்ததை அடுத்து, வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. உக்ரேனின் பல பிரதான நகரங்களில் குண்டு மழை பொழிந்ததில் உக்ரேனிய
மக்கள் பலர் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.
வான்வழித் தாக்குதல்களையும் நிலவழித் தாக்குதல்களையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரேன் தெரிவித்தது. அத்துடன் ரஷ்யாவின் சில படைப் பிரிவுகள் கடல்வழியாகவும் சென்று உக்ரேனின் தெற்குப் பகுதிகளை அடைந்திருப்பதாக தகவல் வெளியானது.
"சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள நான் முடிவெடுத்துள்ளேன். உக்ரேனிய அரசாங்கத்தின் அடக்குமுறையால் கடந்த எட்டு ஆண்டு களாகச் சொல்லில் அடங்காத துன்புறுத்தல்களுக்கும் இன அழிப்புக்கும் ஆளாகியிருக்கும் மக்களைத் தற்காப்பதே இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையின் நோக்கமாகும்.
"இந்த இலக்கை அடைய உக்ரேனின் ராணுவத்தை நாங்கள் வீழ்த்துவோம். அதையடுத்து, ரஷ்யர்கள் உட்பட அப்பாவி பொதுமக்களுக்கு எதிராகப் பல கொடுமைகளைப் புரிந்த உக்ரேனியத் தலைவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவோம்.
"உக்ரேனுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் நோக்கமல்ல," என்றார் அதிபர் புட்டின். தனக்கு அடங்கி நடக்க யாரையும் ரஷ்யா வற்புறுத்தாது என்று அவர் கூறினார்.
ஆனால் உக்ரேனிய அரசாங்கத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இந்த மோதலில் வேறு யாராவது தலையிட நினைத்தால் வரலாறு காணாத விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்று அதிபர் புட்டின் எச்சரிக்கை விடுத்தார்.
உக்ரேனிடமிருந்து பிரிந்து செல்ல டொனெக்ஸ், லுஹான்ஸ்க் பகுதியில் பிரிவினைவாதிகள் போரிட்டு வருகின்றனர். இந்தப்
பகுதியைச் சேர்ந்த மக்களை உக்ரேனிய அரசாங்கம் கொடுமைப்
படுத்தியதாக அதிபர் புட்டின் தெரிவித்தார்.
இந்த இரண்டு பகுதிகளும் உக்ரேனைச் சேர்ந்தவையல்ல என்றும் அவை தனிநாடுகள் என்றும் ரஷ்யா அங்கீகரிப்பதாக திரு புட்டின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ரஷ்யா நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் மாண்டுவிட்டதாக உக்ரேனிய உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்தது. பலர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
நாட்டின் உள்கட்டமைப்புகளை அழிக்கும் இலக்குடன் எதிரி முழுவீச்சுடன் செயல்பட்டு வருவதாக உக்ரேனிய அதிபர் மாளிகை கூறியது.
ரஷ்யப் படையினரை எதிர்த்து தனது ஆயுதப் படைகள் கடுமையாகப் போரிட்டு வருவதாக
உக்ரேனிய அரசாங்கம் கூறியது.
உக்ரேனிய நேரப்படி நேற்று அதிகாலை தாக்குதல் தொடங்கியது. தலைநகர் கியெவ்வில் தொடர்ந்து பல ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன. அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகில் துப்பாக்கிச்சூடும் நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. நகரெங்கும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
"உக்ரேனுக்கு எதிராக புட்டின் போர் தொடுத்துள்ளார். ரஷ்யப் படைகள் முழு அளவில் தாக்குதல் நடத்துகின்றன. இதுவரை உக்ரேனிய நகரங்களில் அமைதியான சூழல் நிலவியது. அதைச் சீர்
குலைக்கும் வகையில் ரஷ்யா போர் முரசு கொட்டி படைகளை அனுப்பி உள்ளது," என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் பதிவிட்டார்.
"எங்களுக்கு எதிராக ரஷ்யா வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது. எதிரிப் படைகளை எதிர்த்து நாங்கள் போரிட்டு நாட்டைத் தற்காப்போம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். புட்டினின் இந்த மூர்க்கத்தனமான செயல்பாட்டை உலக நாடுகளால் ஒன்றிணைந்து தடுக்க முடியும். ரஷ்யாவைத் தடுத்து நிறுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே சரியான நேரம்," என்றார் அவர்.
இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளின் விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க தலைமையின்கீழ் செயல்படும் ராணுவக் கூட்டணியில் உக்ரேனும் இடம்பெறுவது ஏற்க முடியாத ஒன்று என்று அதிபர் புட்டின் தொடர்ந்து பலமுறை கூறி வருகிறார்.
உக்ரேனிய மண்ணைத் தள
மாகக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்
படக்கூடும் என்றார் அவர்.
"நவீன உக்ரேனில் நிலவும் சூழல் ரஷ்யாவுக்கு எதிராக மிரட்டல்களாக உள்ளன. இதனால் எங்களுக்குப் பாதுகாப்புணர்வு இல்லாமல் போய்விட்டது. இது எங்கள் முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ளது.
எனவே, தாக்குதலில் ஏற்படும் உயிர்ச்சேதங்களுக்கு உக்ரேனிய அரசாங்கமே பொறுப்பு," என்று அதிபர் புட்டின் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரேனில்
ராணுவச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரஷ்யா நடத்தும் தாக்கு தல் பற்றி பேசிவிட்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமியர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரேனிய எல்லைப் பாதுகாப்புப் படையினரை ரஷ்ய ராணுவ வீரர்கள் தாக்கியதாகவும் நாட்டின் ராணுவக் கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் உக்ரேனிய மக்களிடம் அவர் காணொளி மூலம் கூறினார்.
ரஷ்யாவுக்கு எதிராக அனைத்துலக ஆதரவை அமெரிக்கா திரட்டி வருவதாக திரு ஸெலென்ஸ்கி தெரிவித்தார். பதற்றம் அடையாமல், அமைதியாக இருக்கும்படி உக்ரேனிய மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
முடிந்தவரை வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு அவர் தமது நாட்டினரிடம் கூறினார். ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரேனிய ராணுவம் போரிட்டு வருவதாகவும் தற்காப்புத் துறை முழுவீச்சுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் உறுதி அளித்தார். எதிரிப் படைகளை உக்ரேன் முறியடிப்பது உறுதி என்றார் அவர்.
புட்டின் எடுத்துள்ள முடிவை சாடிய அமெரிக்க அதிபர்
இது ஒருபுறம் இருக்க அதிபர் புட்டினின் செயல்பாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
ரஷ்யா நடத்தியுள்ள இந்த அநியாயமான தாக்குதலுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து பதிலடி கொடுக்கும் என்றார் அவர்.
"பெருமளவிலான உயிரிழப்பு, துன்பம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய போரை அதிபர் புட்டின் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளார். போரின் காரணமாக ஏற்படும் மரணங்கள், பேரழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு," என்று அதிபர் பைடன் கூறினார்.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல உலகத் தலைவர்கள் ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிராக கூடிய விரைவில் மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

