உக்ரேன் ராணுவம் ஆயுதங்களைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா அறிவிப்பு
உக்ரேன்மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இரண்டாம் நாளான நேற்று ரஷ்யப் படைகள் உக்ரேன் தலைநகர் கியவ்விற்குள் நுழைந்துவிட்டன.
கியவ்வின் வடக்கு மாவட்டமான ஒபலோன்ஸ்கியில் ரஷ்யப் படைகள் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. உக்ரேன் நாடாளுமன்றத்தில் இருந்தும் கியவ் நகரின் மையப் பகுதியில் இருந்தும் 9 கிலோமீட்டர் வடக்கே அப்பகுதி அமைந்துள்ளது.
அந்நகரின் ஆளரவமற்ற சாலைகளில் ரஷ்யக் கவச வாகனங்கள் சென்றபடி இருந்ததைக் காணொளிகள் காட்டின.
இந்நிலையில், கியவ்விற்கு அருகே அமைந்துள்ள முக்கியமான ஹாஸ்டமல் விமானப்படைத் தளத்தைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. அப்போதைய சண்டையில் உக்ரேன் ராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
முன்னதாக, உக்ரேனில் 1986ல் ஆக மோசமான அணுஉலை விபத்து நிகழ்ந்த, கியவ்விலிருந்து 130 கி.மீ. தொலைவிலிருக்கும் செர்னோபில் பகுதியை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது.
இதனிடையே, ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முயற்சியை உக்ரேன் முடுக்கிவிட்டுள்ளது. வயது வரம்பின்றி குடிமக்கள் அனைவரும் ராணுவத்தில் சேரும்படி உக்ரேன் தற்காப்பு அமைச்சு டுவிட்டர் மூலம் அழைப்பு விடுத்து இருக்கிறது.
"இன்று, உக்ரேனுக்கு எல்லாம் தேவைப்படுகிறது. ராணுவத்தில் சேர்வதற்கான எல்லா நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுவிட்டன. கடவுச்சீட்டும் அடையாள எண்ணும் போதும்," என்று அந்த டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளது. அதற்கேதுவாக, 18 முதல் 60 வயதிற்குட்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யப் படைகளின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் பெட்ரோல் குண்டுகளை வீசி எதிரிகளைச் செயலிழக்கச் செய்யுமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, முதல் நாள் தாக்குதலில் உக்ரேனியர்கள் 137 பேர் இறந்துவிட்டதாகவும் 312 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
தமக்கும் தம் குடும்பத்திற்கும் ரஷ்யா குறிவைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தம்மை அழிப்பதன்மூலம் உக்ரேனை அரசியல்ரீதியாக அழித்தொழிக்க விரும்புகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
உக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேறுவதைத் தடுக்க ஐரோப்பியத் தலைவர்கள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
"இரண்டாம் உலகப் போரைப் போல இனி ஒருபோதும் இராது என்று கூறினீர்கள். ஆனால், இப்போது அதைக் காண்கிறோம்," என்றார் ஸெலென்ஸ்கி.
மேலும், ரஷ்யாவின் மூர்க்கத் தனத்தைத் தடுக்க இப்போதும் நேரமுள்ளது என்ற அவர், தங்கள் நாடுகளின் அரசாங்கங்களை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஐரோப்பிய நாடுகளின் மக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ், உக்ரேன் அரசாங்கத்தின் நிலைத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பினார்.
"உக்ரேன் ராணுவம் எங்களது கோரிக்கைக்குச் செவிமடுத்து, ஆயுதங்களைக் கீழே போட்டால், எந்த நேரத்திலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார்," என்று லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் வேண்டுமென்றே உக்ரேனை ரானுவமயமாக்குவதாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், உக்ரேனியர்கள் தங்களது எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, ரஷ்யாவால் தனி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட, ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதிகளின் பிரதிநிதிகளை லாவ்ரோவ் சந்தித்துப் பேசினார். அந்தக் காணொளியை ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டது.
'450 வீரர்களை இழந்த ரஷ்யா'
இதனிடையே, உக்ரேன் முழுவதையும் கைப்பற்ற ரஷ்யா நோக்கம் கொண்டுள்ளது என்றும் ஆனாலும் முதல் நாளான நேற்று முன்தினம் அதன் முதன்மை இலக்குகள் ஈடேறவில்லை என்றும் பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், சண்டையில் 450க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா இழந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடிபணிய மாட்டேன்: ஆசிரியை சூளுரை
செஞ்சிலுவைச் சங்கம் US$100,000 ஆதரவு
உக்ரேனில் நடக்கும் சண்டையால் பாதிக்கப் படுவோருக்கு 100,000 அமெரிக்க டாலர் (S$135,400) மதிப்பிலான ஆதரவு வழங்கப்படும் என சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்காக அவ்வமைப்பு பொதுமக்களிடம் நிதி திரட்டியும் வருகிறது.
உக்ரேனின் சுகைவ் நகர்மீது ரஷ்ய ராணுவம் தொடுத்த தாக்குதலில், சன்னல் நொறுங்கி, கண்ணாடித் துண்டுகள் துளைத்ததில் ஒலினா குரிலோ, 52 (படம்), எனும் இந்த ஆசிரியையின் முகமெல்லாம் ரத்தம். ஆயினும், சற்றும் கலங்காது "எச்சூழலிலும் புட்டினுக்கு நான் அடிபணிய மாட்டேன். அதற்கு உயிரைவிடுவதே மேல். என் தாய்நாட்டிற்காக எதையும் செய்வேன்," என்று இவர் சூளுரைத்தார்.
படம்: ஏஎஃப்பி
புட்டின்-மோடி பேச்சு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி வழியாகப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரஷ்யா, 'நேட்டோ' நாடுகளுக்கு இடையிலான பிணக்குகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.

