தலைநகர் கியவ் இன்னமும் உக்ரேனின் பிடியில் இருப்பதாக அந்நாட்டு அதிபர் வொலோடமியர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
"எதிரிகளின் தாக்குதல்களை நாங்கள் எதிர்கொண்டு அவற்றை வெற்றிகரமாகத் தடுத்துள்ளோம். சண்டை தொடர்கிறது," என்று சமூக வலைத்தளங்களில் காணொளி வாயிலாகத் திரு செலென்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யா, தம்மைப் பிடித்து அதன் சார்பில் ஒரு தலைவரை நியமிக்க வரைந்த திட்டத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆயுதங்களை இறக்கிவைக்காமல் தொடர்ந்து தங்களின் நாட்டிற்காகப் போராடப் போவதாக திரு செலென்ஸ்கி குறிப்பிட்டார்.
கியவைத் தனது பிடிக்குள் கொண்டுவரும் விளிம்பில் ரஷ்யா இருந்தது. எனினும், அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்ததாகவும் ஆகக் கடைசி நிலவரப்படி தெரிவிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமையன்று ரஷ்ய ராணுவம் உக்ரேன் மீது படையெடுத்தது. அதைத் தொடர்ந்து உக்ரேனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ஆகாயவெளியிலிருந்தும் நிலத்திலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கியவின் சாலைகளில் சண்டை மூண்டிருப்பதைத் தொடர்ந்து அந்நகர வாசிகள் வெளியே வராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். கியவின் மையப் பகுதிக்கு அருகே இரண்டு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் ஒருவர் தெரிவித்தார். அவற்றில் ஓர் ஏவுகணை கியவின் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே விழுந்ததாக அவர் சொன்னார்.
கியவை ரஷ்யாவிடம் விட்டுக்கொடுக்காமல் இருக்க உக்ரேன் போராடிவரும் நிலையில் அந்நாட்டின் இதர பகுதிகள் பலவற்றை ரஷ்யா தனது பிடிக்குள் கொண்டுவரும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதாக முன்னதாக சில தகவல்கள் வெளியாயின. எனினும், கியவை வென்று உக்ரேன் அதிபர் செலென்ஸ்கியையும் அவரது அரசாங்கத்தையும் விலக்குவதே ரஷ்யாவின் முக்கியக் குறிக்கோளாக இருந்து வருகிறது.
படையெடுப்பு தொடங்கி முதல் இரண்டு நாள்களிலேயே ரஷ்யா குறைந்தது 200 ஏவுகணைகளை உக்ரேனின் பல பகுதிகளில் பாய்ச்சியதாக அமெரிக்கா கணித்துள்ளது. உக்ரேனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மெலிட்டோப்பல் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்தப் பூசலில் மூன்று பிள்ளைகள் உட்பட இதுவரை குறைந்தது 198 பேர் மாண்டுவிட்டதாக உக்ரேனின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். 2,800 ரஷ்ய ராணுவ வீரர்கள் மாண்டதாக உக்ரேனின் தற்காப்பு அமைச்சு கூறியது. எனினும், அதற்கான ஆதாரம் எதையும் அது காட்டவில்லை. இதன் தொடர்பில் மாஸ்கோ தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, 'சுவிஃப்ட்' எனும் நிதித் தகவல் முறையிலிருந்து ரஷ்யாவைத் தடைசெய்யும் முயற்சிகளை எடுப்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உடனே முடிவெடுக்காது என்பது பலரின் எதிர்பார்ப்பு.

