சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சனிக்கிழமை குறைந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சனிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை 1,553; வெள்ளிக்கிழமை அது 1,584ஆக இருந்தது.
இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை சற்றே அதிகரித்து 46ல் இருந்து 50 ஆனது.
212 பேருக்கு செயற்கைச் சுவாசக் கருவிகள் பொருத்தவேண்டியிருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாள்களாக நோய்த்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை இருபதாயிரத்துக்கும் கீழ் குறைவாகப் பதிவானதாக அமைச்சு குறிப்பிட்டது. சனிக்கிழமை இரவு கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 16,587. கொவிட்-19ஆல் மேலும் 13 பேர் மாண்டுவிட்டனர்.
புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டோரில் 143 பேர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.
வாராந்தர கொவிட்-19 கிருமித்தொற்று விகிதமும் சற்றுக் குறைந்து 1.21ஆனதாகச் சுகாதார அமைச்சு கூறியது.


