கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேன் மீது அனைத்துலகச் சட்டத்தை மீறி படை எடுத்து நுழைந்துள்ள பக்கத்து நாடான ரஷ்யா, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) உக்ரேனின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான கார்கிவ் என்ற நகருக்குள் புகுந்துவிட்டதாக உக்ரேனிய உள்துறை அமைச்சின் ஆலோசகர் ஆன்டன் கிராஷ்சென்கோ கூறினார். இந்த நகரம் தலைநகர் கியவில் இருந்து 400 கிமீ. தொலைவில் உள்ளது.
அதேவேளையில், உக்ரேனின் தெற்கு, தென்கிழக்கு வட்டாரங்களில் இருக்கும் இதர இரு நகர்களை முற்றிலும் சுற்றிவளைத்து விட்டதாக ரஷ்யா தெரிவித்தது.
போர் தொடங்கி நான்கு நாள்கள் ஆன நிலையில், உக்ரேன் தலைநகருக்குள் நுழைய பல திசை களிலும் முயன்றுவரும் ரஷ்யா ஞாயிற்றுக்கிழமையும் கடும் எதிர்ப்பை எதிர்நோக்கியதாக உக்ரேன் தரப்புகள் கூறின.
என்றாலும் தலைநகரான கியவில் ஞாயிற்றுக்கிழமை அபாய எச்சரிக்கை சங்கு ஒலித்ததாகவும் அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
அதற்கு சுமார் 20 நிமிடங்கள் கழித்து மேலும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அது தெரிவித்தது.

