உக்ரேனில் ரஷ்யா இனப்படுகொலை விளம்பிற்கு வந்துவிட்டது. ஆகையால் ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ரஷ்யா பெற்றுள்ள வீட்டோ அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உக்ரேன் அதிபர் செலென்ஸ்கி உலகத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தி ஹேக் நகரில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்திடம் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் நேற்று புகார் செய்தது.
"உக்ரேனில் பயங்கரவாதத்தை ரஷ்யா அரங்கேற்றுகிறது. உக்ரேன் நகரங்களை மேலும் மேலும் குண்டு போட்டு தாக்கி வருகிறார்கள். இன்னும் அதிகமாக சிறார்களைக் கொன்று குவிக்க முயல்கிறார்கள். குடியிருப்பு பகுதிகளைக் குண்டு போட்டு அழிக்கிறார்கள்.
"உக்ரேன் மண்ணில் தலைவிரித்தாடும் இந்தக் கொடு மையை அழித்தாக வேண்டும்," என்று காணொளியில் அதிபர் குறிப்பிட்டார்.
உக்ரேனில் ரஷ்யா அரங்கேற்றும் குற்றவியல் செயல்கள் இனப்படுகொலையின் அடையாளம் என்றார் அவர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேன் மீது அனைத்துலகச் சட்டத்தை மீறி படை எடுத்து நுழைந்துள்ள பக்கத்து நாடான ரஷ்யா, நேற்று உக்ரேனின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான கார்கிவ் என்ற நகருக்குள் புகுந்துவிட்டதாக உக்ரேனிய உள்துறை அமைச்சின் ஆலோசகர் ஆன்டன் கிராஷ்ெசன்கோ கூறினார். இந்த நகரம் தலைநகர் கியவில் இருந்து 400 கிமீ. தொலைவில் உள்ளது.
அதேவேளையில், உக்ரேனின் தெற்கு, தென்கிழக்கு வட்டாரங்களில் இருக்கும் இதர இரு நகர்களை முற்றிலும் சுற்றிவளைத்து விட்டதாக ரஷ்யா தெரிவித்தது.
போர் தொடங்கி நான்கு நாள்கள் ஆன நிலையில், உக்ரேன் தலைநகருக்குள் நுழைய பல திசை களிலும் முயன்றுவரும் ரஷ்யா நேற்றும் கடும் எதிர்ப்பை எதிர்நோக்கியதாக உக்ரேன் தரப்புகள் கூறின.
என்றாலும் தலைநகரான கியவில் நேற்று அபாய எச்சரிக்கை சங்கு ஒலித்ததாகவும் அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
அதற்கு சுமார் 20 நிமிடங்கள் கழித்து மேலும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அது தெரிவித்தது.
இந்நிலையில், பக்கத்தில் உள்ள பெலரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ரஷ்யா தெரிவித்த யோசனையை உக்ரேன் அதிபர் செலென்ஸ்கி நேற்று நிராகரித்துவிட்டார். இருந்தாலும் வேறு இடத்தில் பேச தான் தயார் என்று அவர் தெரிவித்தார்.
உக்ரேனுடன் பேசுவதற்காக பெலரசில் ரஷ்ய குழுவினர் ஏற்கெனவே வந்துவிட்டதாக கிரெம்ளின் தெரிவித்து இருந்தது.
உக்ரேனின் இரண்டாவது ஆகப் பெரிய நகரைப் பிடிக்கும் முயற்சியில் ரஷ்ய படைகள் எண்ணெய் எரிவாயு நிலைகளைக் கொளுத்திவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இருந்தாலும் தலைநகருக்குள் ரஷ்ய படைகளை விடாமல் உக்ரேனிய படைகள் ஆக்ரோஷமாகப் போராடி வருவதாக அந்த நாட்டின் அதிபர் கூறி வருகிறார்.
கார்கிவ் நகரிலும் எண்ணெய் முனையம் ஒன்றில் ரஷ்ய ஏவுகணை பாய்ந்ததில் அந்த முனையம் தீப்பற்றியதாக அந்த நகரத்தின் மேயர் திருவாட்டி நட்டாலிய பலாசினோவிச் தெரிவித்தார். உக்ரேனில் ஒவ்வொன்றையும் துடைத்து ஒழிக்க ரஷ்யா முடிவு செய்துவிட்டது என்றாரவர்.
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு உக்ரேன் மிரட்டலாக இருக்கிறது என்று கூறி அந்த நாட்டுக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் போரைத் தொடங்கினார்.
தலைநகரைப் பிடிக்க அனைத்து திசைகளில் இருந்தும் முயன்று வரும் ரஷ்ய படைகளை உக்ரேனிய படைகள் மிக உறுதியுடன் எதிர்த்து போராடி வருவதாக அமெரிக்க தற்காப்பு அதிகாரி தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கு உக்ரேனில் ரஷ்ய படைகள் சந்தித்து வரும் எதிர்ப்பைக் கண்டு ரஷ்யப் படைகளே சலித்துப்போய்விட்டன என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இதர பல நாடுகளும் மேலும் கடுமையாக்கத் தொடங்கி இருக்கின்றன.
அதிபர் புட்டினின் போர் முயற்சி களுக்கு ஆதரவு கொடுக்க முடியாதபடி ரஷ்யாவின் மத்திய வங்கி மீது தாங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
அனைத்துலக நிதி முறை, பொருளியல் ஆகியவற்றில் இருந்து ரஷ்யாவை ஒதுக்கிவைக்கப் போவதாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஐரோப்பிய ஆணையம் ஆகியவை கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இந்த நடவடிக்கையை 'நிதி அணு ஆயுதம்' என்று பிரான்ஸ் வர்ணித்து இருக்கிறது. இது ரஷ்யாவின் பொருளியலைக் கணிசமாகப் பாதித்துவிடும் என்று அந்த நாடுகள் கூறி இருக்கின்றன.
இந்தப் போரில் ஏறத்தாழ 3,500 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டு விட்டதாக அல்லது காயமடைந்துவிட்டதாக உக்ரேனிய அதிபர் ஆலோசகர் ஒருவர் கூறினார்.
எதிர்பார்த்ததைவிட ரஷ்யா அதிக பாதிப்புகளை எதிர்நோக்குவதாக வேவு தகவல்கள் மூலம் தெரியவருகிறது என மேற்கத்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ரஷ்ய படையினர் உக்ரேனில் நுழைந்ததை அடுத்து குறைந்தபட்சம் 64 குடிமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐநா நிவாரண அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதர பலரும் காயமடைந்து இருக்கிறார்கள். இவ்வேளையில், போர் காரணமாக 160,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய அகதிகள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, நாடுகளுக்குள் புகுந்து இருப்பதாக ஐநா அகதிகள் அமைப்பு தெரிவிக்கிறது.
உக்ரேனுக்கு ஆதரவாக US$350 மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை விடுவிக்க அமெரிக்க அதிபர் அங்கீகாரம் வழங்கி இருக்கிறார். அதேவேளையில், கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்களையும் தரையில் இருந்து விண்ணுக்குப் பாயும் ஏவுகணைகளையும் அனுப்பப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
பக்கங்கள் 5,6,7ல்
மேலும் செய்திகள்

