சிங்கப்பூரில் மோசடிகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் இரண்டு மடங்காக்குகிறது என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்து இருக்கிறார்.
சட்டவிரோத பரிவர்த்தனைகளை நிறுத்த காவல்துறை பாடுபட்டு வருகிறது.
இருந்தாலும் அத்தகைய செயல்களின் மூலம் பணம் சிங்கப்பூரின் எல்லைகளுக்கு அப்பாலும் கைமாறுவதால் தொடர்ந்து காவல்துறை சிரமமான சவாலை எதிர்நோக்குகிறது என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பல்வேறு வகை மோசடிகளில் சிக்கி அப்பாவி மக்கள் குறைந்தபட்சம் $633.3 மில்லியன் தொகையை சென்ற ஆண்டில் இழந்துவிட்டனர். இது 2020ல் மோசடிகளில் பறிபோன $268.4 மில்லியனைவிட ஏறத்தாழ 2.5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
"நாம் முயற்சிகளை இரண்டு மடங்காக்குகிறோம். குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளைத் தடுக்க காவல்துறை மேலும் அதிகாரங்களைப் பயன்படுத்துகிறது.
"ஆனாலும் அத்தகைய சட்டவிரோத பரிவர்த்தனைகளின் சிக்கலான தன்மை காரணமாகவும் மின்னிலக்கம் மூலம் அவை இடம்பெறுவதாலும் சவால் பெரியதாக விரிவடைகிறது," என்றார் அமைச்சர்.
திரு சண்முகம், மார்சிலிங்கில் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
"மோசடிக்காரர்களிடம் பறிகொடுத்த பணத்தை மீட்பது அதிகாரிகள் எதிர்நோக்கும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது.
"குறிப்பாக மோசடிக்காரர்கள் சிங்கப்பூருக்கு வெளியே இருப்பார்களேயானால் இந்தச் சவால் அதிகாரிகளுக்குச் சிக்கலானதாகிவிடும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"பெரும்பாலும் இத்தகைய மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகிறார்கள். பணம் வெளியேறிவிட்டால் அதை எப்படி மீட்பது?. அந்தப் பணம் பல வழிகளில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இது மிகப் பெரிய சவால்," என்று அமைச்சர் தெரிவித்தார்.
மோசடிகளில் சிக்கி அப்பாவி மக்கள் பணத்தை இழப்பதைத் தடுக்க உதவும் வகையில் காவல்துறை 2019ல் மோசடி எதிர்ப்பு நிலையம் ஒன்றை அமைத்தது.
சிங்கப்பூரில் அப்பாவி மக்கள் இழந்து இருக்கும் $700 மில்லியன் தொகையில் $160 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை காவல்துறையினர் மீட்டு இருக்கிறார்கள்.
மோசடிக்காரர்கள் பயன்படுத்தி இருப்பதாக நம்பப்படும் 24,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் முடக்கி இருக்கிறார்கள். மோசடிகளைத் துடைத்தொழிப்பதற்கான தலைசிறந்த வழி, அவை அறவே நிகழாதபடி தடுப்பதுதான் என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
மோசடித் தகவல்களை வடிகட்டிவிடக் கூடிய 'ஸ்கேம்ஷீல்டு' என்ற கைப்பேசிச் செயலியை அமைச்சர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக மிகக் கணிசமான அளவிற்கு மோசடிகள் தடுக்கப்பட்டு இருப்பதாகவும் திரு சண்முகம் கூறினார்.
செய்தி: கி.ஜனார்த்தனன்

