கி. ஜனார்த்தனன்
மார்சிலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தின் பலநோக்கு மண்டபத்தை அனைத்து இனங் களையும் சமயங்களையும் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று அந்த ஆலயத்தின் நிர்வாகக் குழு தெரிவித்தது.
நேற்றுக் காலை நடந்த அந்தப் புதிய நான்கு மாடி கட்டடத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் ஏறக்குறைய 100 பேர் கலந்துகொண்டனர். கட்டுமானப் பணிகளுக்கு நிதியளித்த 65 ஆதரவாளர்கள் இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டனர்.
புதிய கட்டடத்தில் 250 பேர் வரை அமரக்கூடிய பன்னோக்கு மண்டபம், வகுப்பறைகள், ஆடல் அறை, திறந்த வெளிக் கூரைமாடம் ஆகியவை உள்ளன. அக்கட்டடம் $4.3 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், தற்காப்பு மற்றும் மனிதவள அமைச்சுகளுக்கான மூத்தத் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், இந்தக் கட்டடத்திற்கு ஆதரவு வழங்கியோர் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.
புதிய கட்டடத்தில் இடங்களுக்காக முன்பதிவு செய்ய ஆர்வமுள்ளோர், ஆலயத்தை 6368-0030 என்ற எண்ணில் அழைக்கலாம். அல்லது admin@srisivakrishnatemple.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

