உக்ரேனிய மக்களுக்குக் காயம், மரணம் விளைவிக்கவும் அவர்களை அடிபணியச் செய்யவும் ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய பொருள்களை ஏற்றுமதி செய்ய சிங்கப்பூர் தடை விதிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில ரஷ்ய வங்கி
களுக்கும் அந்நாட்டுடன் தொடர்புடைய சில நிதிப் பரிவர்த்
தனைகளுக்கும் சிங்கப்பூர் தடை விதிக்கும் என்றார் அவர். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதை அடுத்து, சிங்கப்பூர் இந்த நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
தடைகள் தொடர்பான
துல்லியமான விவரங்கள் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் அவை தொடர்பாக அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது என்றும் அமைச்சர் விவியன் குறிப்பிட்டார்.
"ரஷ்யாவுடனும் அந்நாட்டு மக்களுடனும் சிங்கப்பூர் கொண்டுள்ள நல்லுறவுக்கு நாங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஆனால் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பு கொடுக்காமல் அதன் மீது தாக்குதல் நடத்தி ஆக்கிரமிப்பதை சிங்கப்பூர் ஏற்காது.
"உக்ரேனுக்கு எதிரான படையெடுப்புக்குக் கண்டனம் தெரிவித்து அதற்கு எதிராக எங்கள் நிலைப்பாட்டைக் காட்டவும்
வன்முறை மற்றும் உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டுவரவும் ஆசியான், அனைத்துலகப் பங்காளி
களுடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்," என்றார் அமைச்சர்.
அண்மையில் ஐநா பாதுகாப்பு மன்றம் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முன்
மொழிந்தது. அதை ஏற்று ஆதரவு தந்த 82 நாடுகளில் சிங்கப்பூரும் அடங்கும் என்பதை டாக்டர்
விவியன் சுட்டினார்.
இருப்பினும், ரஷ்யாவுக்கு எதிரான அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
மன்றத்தின் நிரந்தர உறுப்
பினர் என்ற முறையில் தனக்கு இருக்கும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரஷ்யா தடுத்து நிறுத்தியது.
மன்ற உறுப்பினர்களாக 15 நாடுகள் உள்ளன. இவற்றில் 11 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. சீனா, இந்தியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
"ஐநா பாதுகாப்பு மன்றம் எடுக்கும் முடிவுகளுக்கும் விதிக்கும் தடைகளுக்கும் சிங்கப்பூர்
எப்போதும் மதிப்பு தந்து அவற்றுக்கு உட்பட்டு நடக்கிறது. ஆனால் மன்றம் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேறாத நிலையில் பிற நாடுகள் மீது சிங்கப்பூர் தடைகள் விதிப்பது மிகவும் அரிது," என்றார் அமைச்சர் விவியன்.
ரஷ்யா-உக்ரேன் மோதலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர விரும்பும் நாடுகளைப் போலவே சிங்கப்பூரும் ரஷ்யாவுக்கு எதிராக குறிப்பிட்ட சில தடைகளை விதிப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் வர்த்தகர்களுக்கும் இது சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார் அமைச்சர் விவியன்.
இருப்பினும், கொள்கைப் பிடிப்பை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் கூறினார். அவ்வாறு செய்தால் மட்டுமே சிறிய நாடுகளின் இறையாண்மையைக் கட்டிக்காக்க முடியும் என்றும் அப்போதுதான் சிங்கப்பூரின் இறையாண்மைக்கு எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதை எதிர்த்து, தொடர்ந்து தனிநாடாகச் செழித்தோங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் எப்போதும் யார் பக்கமும் சாயாமல் நடுநிலை
யுடன் இருக்கும் என்றபோதிலும் தனது கொள்கைகளைக் கை
விடாமல் அவற்றின்படி செயல்படும் என்று அமைச்சர் விவியன் உறுதி அளித்தார்.
உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு அனைத்துலக விதிமீறலாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் விவியன், அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். இன்னொரு நாட்டுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்க்க ஐநா சாசனம் தடை விதித்திருப்பதை அவர் சுட்டினார்
"வலிமைமிக்க நாடுகள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் செய்து பிற நாடுகளைத் துன்புறுத்தும் நிலை நடப்பில் இருந்தால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு அது தீங்கை விளைவிக்கும். எவ்வித காரணமும் இல்லாமல் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதை ஏற்க முடியாது. வரலாற்றுப் பிழை போன்ற காரணங்களைக் காட்டி தாக்குதல் நடத்துவது முறைஅல்ல. சுதந்திர நாடுகளாக அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்படும் பல நாடுகளை இத்தகைய மனப்போக்கு வெகுவாகப் பாதிக்கும். இதில் சிங்கப்பூரும் அடங்கும்," என்றார் அமைச்சர் விவியன்.
இதற்கிடையே, ரஷ்யாவின் படையெடுப்புக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவிப்பதாகப் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"ஒப்பந்தங்களும் அரசியல் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தால் சிங்கப்பூரைப் பாதுகாக்க மற்ற நாடுகள் விரையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதை உக்ரேனுக்கு ஏற்பட்டுள்ள நிலை நமக்கு உணர்த்துகிறது. நாட்டைப் பாதுகாக்கும் திறனை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது," என்றார் திரு லீ.
இதற்கு தேசிய சேவையும் தயார்நிலையில் உள்ள சிங்கப்பூர் ஆயுதப் படையும் மிகவும் முக்கியம் என்று பிரதமர் லீ தெரிவித்தார். அத்துடன் சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

