போர் நிறுத்தம் உடனடியாக அமல்
படுத்தப்பட வேண்டும் என்றும் ரஷ்யா அதன் படைகளை உக்ரேனிய மண்ணிலிருந்து மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் உக்ரேன் வலியுறுத்தியுள்ளது.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை உக்ரேன்-பெலருஸ் எல்லைப் பகுதியில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் ஆயுதங்களை விட்டுவிட்டு உக்ரேனிலிருந்து வெளியேறி உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு ராணுவ வீரர்களை
உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்தார்.
நாட்டைத் தற்காக்க உக்ரேனியப் படையினர் போரிட்டதில் 4,500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் மாண்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், உக்ரேனை
உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக்க வேண்டும் என்று திரு ஸெலென்ஸ்கி
கேட்டுக்கொண்டார்.
ரஷ்யப் படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐநாவிடம் உக்ரேனும் அதன் நட்பு நாடுகளும் கேட்டுக்கொண்டன.
இந்நிலையில், நேற்று மாலை நிலவரப்படி போர் காரணமாக உக்ரேனில் ராணுவ வீரர்களைச் சேர்க்காமல் சிறுவர்கள் உட்பட குறைந்தது 210 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டின் மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அதிபர் ஸெலென்ஸ்கியைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்ல செச்சன்
சிறப்புப் படையினரை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் செச்சன் படையினர் பலரை உக்ரேனியப் பாதுகாப்புப் படை கொன்று ரஷ்யாவின் திட்டத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ரஷ்ய அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனத்தின் இணையத்தளம் ஊடுருவப்பட்டது. போரை
நிறுத்தும்படி ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புட்டினுக்கு அதன்மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.