'அரசுரிமையில் தலையிடுவது சிறிய நாடுகளுக்கு வாழ்வா சாவா பிரச்சினை'
உக்ரேன் மீது படையெடுத்ததன் மூலம் அனைத்துலகச் சட்டங்
களின் அடிப்படை விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளதாக சிங்கப்பூரின் தூதர் புர்ஹான் கஃபூர் ஐக்கிய நாடுகள் அவையில் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டின் ஆட்சியுரிமைக்கு எதிராக படை
களைப் பயன்படுத்தவும் ஆக்கிரமிப்பில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ள ஐநா சாசனத்தையும் ரஷ்யா மீறியுள்ளது என்றார் அவர்.
நியூயார்க்கிலுள்ள ஐநா அவையின் அவசர சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
"ரஷ்யக் கூட்டமைப்பின் நட
வடிக்கை உக்ரேனின் வட்டார ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்சியுரிமையை மீறிய செயல் என்றும் ஐநா சாசனக் கொள்கைகளுக்குப் புறம்பானது என்றும் ஐநா தலைமைச் செயலாளர் கருதுகிறார்.
"அவரது கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம். அத்துடன் உக்ரேன் வட்டாரத்திலிருந்து ரஷ்யா தனது படைகளை மீட்டுக்கொள்ள அவர் விடுத்திருக்கும் அழைப்பை ஆதரிக்கிறோம். பகைமையைக் கைவிட்டு ஐநா சாசனம் மற்றும் அனைத்துலகச் சட்டங்
களுக்கு இணங்க அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு தலைமைச் செயலாளர் விடுத்திருக்கும் அழைப்புக்கும் எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார் திரு கஃபூர்.
அரசதந்திர உறவுகளை ஏற்
படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐநா மேற்கொண்டிருக்கும் முயற்சி களுக்கு சிங்கப்பூர் ஆதரவுக்கரம் நீட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
அரசுரிமையின் முக்கியத்துவம் பற்றி மன்றத்தில் அவர் விளக்கினார்.
"அனைத்துலக அளவில் அங்கீ கரிக்கப்பட்ட உக்ரேன் உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் அரசுரிமையும் அரசியல் சுதந்திரம், வட்டார ஒருங்கிணைப்பு போன்றவையும் மதிக்கப்பட வேண்டும். இவற்றில் சிங்கப்பூர் எப்போதும் தனது நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளது.
"எல்லா சிறிய நாடுகளுக்கும் இது ஒரு கொள்கை அளவிலான விவகாரம். அத்துடன், இது பொதுச் சபையில் பங்கேற்கும் எல்லா உறுப்பு நாடுகளின் அடிப்படையான அவசியமும்கூட.
"சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு இதுபோன்ற விவகாரம் வாழ்வா சாவா பிரச்சினை. பலம் கொண்ட நாடுகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; பலவீனமான நாடுகள் எந்த அளவுக்கும் பாதிக்கப்படலாம் என்கிற போக்கு இருக்குமானால் அது சிறிய நாடுகளின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் எதிரானதாக அமைந்துவிடும்," என்றார் அவர்.
திரு கஃபூர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஐநாவுக்கான சிங்கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்து வருகிறார். இதற்கு முன்னர் அவர் பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கான தூதராகப் பொறுப்பு வகித்தார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை ஐநா பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இயலாமல் போனதைத் தொடர்ந்து அவசர சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பொதுச் சபைக் கூட்டத்தில் சுமார் 100 நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய படையெடுப்பு தொடர்பான வரைவுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இன்று புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

