இம்மாதம் 16ஆம் தேதியில் இருந்து கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை (விடிஎல்) அனைத்து இந்திய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இப்போது சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து 'விடிஎல்' விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதுபோல, கோலாலம்பூரைத் தாண்டி பினாங்கையும் உள்ளடக்கும் வகையில் மலேசியாவிற்கான 'விடிஎல்' திட்டமும் விரிவுபடுத்தப்படும். வரும் 16ஆம் தேதியில் இருந்து நாள்தோறும் சிங்கப்பூர்-பினாங்கு இடையே இருவழிகளிலும் நான்கு விமானங்கள் இயக்கப்படும்.
அத்துடன், பாலித் தீவை உள்ளடக்கும் வகையில் இந்தோனீசியாவிற்கான 'விடிஎல்' திட்டமும் விரிவுபடுத்தப்படும். அதன்படி, 16ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கும் பாலிக்கும் இடையே நாள்தோறும் இருவழிகளிலும் இரண்டு விமானங்கள் இயக்கப்படும்.
இதனிடையே, கிரீஸ், வியட்னாம் நாடுகளுடன் புதிய 'விடிஎல்' பயணப் பாதை தொடங்கப்படும் என்று சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

