இலங்கை தமிழ்ச் சமூகத்தின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி இலங்கைக்கு இந்தியா கோரிக்கை விடுத்து இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்திற்கான 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கை தனது குடிமக்கள் அனைவரின் அடிப்படை சுதந்திரமும் மனித உரிமைகளும் முற்றிலும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.
ஐக்கிய இலங்கைக்குள் அந்த நாட்டுத் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வகை செய்வது இலங்கைக்கும் நன்மை பயக்கும் என்று தான் ஏற்கெனவே தெரிவித்து இருப்பதை இந்தியா மறுஉறுதிப்படுத்தியது.
ஜெனிவாவில் நடந்த மனித உரிமைகள் மன்றத்தின் 49வது கூட்டத்தின்போது ஐநா மனித உரிமை அமைப்பின் தலைவர் வெளியிட்ட இலங்கை பற்றிய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே, இலங்கை தமிழர்களின் நலன்களைக் காப்பதன் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு கூட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா விலகி இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துலக சமூகத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய தூதர், இலங்கை அதிகாரத்தைப் பரவலாக்கப் போவதாக கொடுத்திருக்கும் உறுதிமொழியைச் சுட்டினார்.
அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் மாநில மன்றங்களுக்கு முன்கூட்டியே தேர்தல்களை நடத்த வேண்டும் என்று இலங்கையை தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஒன்பது மாநில மன்றங்களின் நிர்வாக ஆட்சிக் காலம் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் காலாவதி ஆகிவிட்டது. அந்த மன்றங்களுக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான அவர், இலங்கையில் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பிலும் சமரச ஏற்பாடுகள் தொடர்பிலும் அனைத்துலக சமூகத்தோடும் ஏற்புடைய இதர அமைப்புகளோடும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள ஈடுபாட்டை இந்தியா கவனத்தில் கொண்டிருப்பதாகவும் தூதர் தெரிவித்தார்.
இத்தகைய ஈடுபாடும் பலன் தரும் கலந்துரையாடல்களும் தொடர்வதைக் காண இந்தியா விரும்புவதாகவும் இந்திரா மணி பாண்டே கூறினார்.
ஐநா மனித உரிமை அமைப்பின் தலைமை ஆணையர் வெளியிட்டு உள்ள இலங்கை பற்றிய அறிக்கை, இலங்கையில் சமரசம், பொறுப்பேற்பு, மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதன் தொடர்பிலான கவலைகளை வெளிப்படுத்துவதாக இந்திய தூதர் கூறினார்.
இலங்கையில் கடந்த கால மனித உரிமை மீறல்கள், பாதிக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான அங்கீகாரம் போன்றவற்றுக்குப் பொறுப்பேற்பதில் பின்னடைவுகள் ஏற்பட்டு இருப்பதாக தலைமை ஆணையர் அறிக்கை குறிப்பிட்டது.

