சிங்கப்பூரில் அரசாங்க வாடகை வீடுகளில் குடியிருந்த ஏறத்தாழ 4,500 குடும்பங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள், மானியங்கள் மூலமாக சொந்த வீடுகளைப் பெற்றுள்ளன.
இந்த எண்ணிக்கை, வாடகை வீடுகளில் குடியிருக்கும் மொத்த குடும்பங்களில் கிட்டத்தட்ட 9 விழுக்காட்டுக்குச் சமம்.
ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக கிட்டத்தட்ட 2 விழுக்காடு வாடகைக் குடும்பங்கள் சொந்த வீவக வீடுகளைப் பெறுகின்றன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
2019லிருந்து சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை சுமார் 1,030 வாடகைக் குடும்பங்கள் சொந்த வீடு பெற வீவக வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது.
அந்தக் குடும்பங்களில் சுமார் 340 குடும்பங்கள் அடுத்த மூன்றாண்டுகளில் சொந்த வீடுகளைப் பெற்றுவிடும் என்று கழகம் தெரிவித்தது. எஞ்சிய குடும்பங்களும் சொந்தத்தில் வீடு பெற கழகம் தொடர்ந்து உதவும்.
கடந்த 2017 முதல் 2021 வரை வீவக வீட்டு உரிமையாளர்களாக மாறிய 4,500 குடும்பங்களில் நான்கில் மூன்று குடும்பங்கள், கழகத்திடம் இருந்து நேரடியாக வீட்டை வாங்கின. எஞ்சிய குடும்பங்கள் பகிரங்க சந்தையில் மறுவிற்பனை வீட்டை வாங்கின.
அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூவறை வீடுகளையும் சுமார் கால்வாசி குடும்பங்கள் நாலறை வீடுகளையும் சொந்தமாகப் பெற்றன.
சிங்கப்பூரில் இப்போது அரசாங்க வாடகை வீடுகளில் கிட்டத்தட்ட 51,100 குடும்பங்கள் வசிக்கின்றன. சொந்த வீடு வாங்க வாய்ப்புள்ள, வீட்டை வாங்க தயாராக இருக்கின்ற வாடகைக் குடும்பங்களை வீவகவின் வீட்டுடைமை ஆதரவுக் குழு தொடர்புகொள்ளும்.
இந்தக் குழு 2019ல் அமைக்கப்பட்டது. வாடகை வீடுகளில் இருக்கும் குடும்பங்கள் சொந்தத்தில் வீடு பெற, திட்டமிடுதல் முதல் வீட்டை சொந்தமாகப் பெறும்வரைஇந்தக் குழு வழிகாட்டி உதவுகிறது.
குடும்பத்தின் நிலையான வருமானம், வீட்டை வாங்க அந்தக் குடும்பத்தால் முடியுமா போன்ற பல அம்சங்களைக் கவனத்தில்கொண்டு வீவக மதிப்பீடுகளைச் செய்கிறது.
இதனிடையே, இது பற்றி நேற்று ஃபேஸ்புக்கில் கருத்து கூறிய தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம், மானியத்துடன் கூடிய அரசாங்க வாடகை வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தினருக்கு உதவுவதாக குறிப்பிட்டார்.
அத்தகைய குடும்பங்கள் தயாராக இருக்கும்போது சொந்தமாக வீடு வாங்கவும் கழகம் உதவுகிறது என்று அவர் கூறினார்.

