மலேசியா தனது எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதை ஒட்டி, நாட்டின் அனைத்துலக சோதனைச்சாவடிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று சுற்றுலா, கலாசார அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.
இதில் சிங்கப்பூருடன் கூடிய மலேசியாவின் தரை எல்லையும் அடங்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், எல்லைகள் திறப்பு பற்றி மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விரைவில் அறிவிப்பு விடுப்பார் என்றார்.
மலேசியாவுக்கு அனைத்துலக பயணிகளை வரவேற்க சுற்றுலா, கலாசார அமைச்சு ஆயத்தமாகிவிட்டது என்றும் எப்போதுமே அது இதற்குத் தயாராக இருப்ப தாகவும் அமைச்சர் திருவாட்டி நான்சி கூறினார்.
ஜோகூர் கடற்பாலம் போன்ற தரை எல்லைகள் உட்பட நாட்டின் அனைத்து எல்லைகளும் திறக்கப்படும் என்று ஜோகூர் பாருவில் சுற்றுலாத் துறையினருடன் கூடிய ஒரு சந்திப்புக்குப் பிறகு அமைச்சர் கூறினார்.
இவ்வேளையில், எல்லைகள் திறக்கப்படுவதை ஒட்டி, அதற்கு ஆயத்த மாகும் வகையில் அனைத்துலக நுழைவு வழிகளில் உள்ள எல்லா தானியங்கி வாயில்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் டைஸ்மி தாவுத் தெரிவித்தார்.

