இன ஒதுக்கீட்டு வரம்பு காரணமாக வீடுகளை விற்க சிரமப்படுவோருக்கு ஆதரவு
இன ஒதுக்கீட்டு வரம்புகள் காரணமாக தங்களது அடுக்குமாடி வீடுகளை விற்கச் சிரமப்படும் வீட்டு உரிமையாளர்கள், இப்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) தங்கள் வீடுகளைத் திரும்ப வாங்கிக்கொள்ளும்படி கோரலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
வீடுகளை வீவகவிடம் திரும்ப விற்பதற்குத் தகுதிபெற, வீட்டு உரிமையாளர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு வீட்டை வைத்திருக்க வேண்டும் அல்லது பொதுச் சந்தையில் நியாயமான விலையில் தங்கள் வீட்டை விற்க ஆறு மாத காலத்திற்கு வழக்கமான, உண்மையான முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
தமது அமைச்சின் செலவுத் திட்டங்கள் குறித்த விவாதத்தின் போது பேசிய திரு லீ, நிர்ணயிக்கப்பட்ட இன ஒருங்கிணைப்புக் கொள்கையின்படி இன ஒதுக்கீடு அதன் வரம்பை அடையும்போது, குறைந்த எண்ணிக்கையிலான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை விற்பதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அரசாங்கம் அறிந்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதன் விளைவாக சிலர் தங்களது வீட்டின் விற்கும் விலையைக் குறைக்க வேண்டியிருக்கலாம் அல்லது தங்கள் வீட்டை விற்க அதிக காலம் எடுக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மானியம் வழங்க முடியுமா என்று பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி உறுப்பினர் சோங் கீ ஹியோங், மவுண்ட்பேட்டன் தொகுதி உறுப்பினர் லிம் பியாவ் சுவான் ஆகியோர் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த திரு லீ, மானியத்தை நியாயமான முறையில் அளவிடுவது கடினம் என்றார்.
ஒரு பெரிய புவிப் பரப்பில் இன ஒருங்கிணைப்புக் கொள்கை வரம்புகளைப் பயன்படுத்தலாம் என்ற பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுபாட்டின் யோசனைக்குப் பதிலளித்த திரு லீ, அது குறிப்பிட்ட இனக்குழுக்கள் வசிக்கும் புளோக் அல்லது அக்கம்பக்க நிலையில் அதிக இனக் குவிப்புக்கு வழிவகுக்கும் என்றார்.
"எனவே, சமநிலையைக் கட்டிக்காக்கும் பொருட்டு, இன ஒருங்கிணைப்புக் கொள்கையால் வீடுகளை விற்க சிரமப்படும் குடும்பங்களிலிருந்து வீடுகளைத் திரும்ப வாங்குவதே மிகவும் சாத்தியமான தெரிவாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளோம். இது நாங்கள் எளிதாக எடுத்த முடிவு அல்ல. ஏனெனில் இதற்கு குறிப்பிடத்தக்க அரசாங்க வளங்கள் தேவைப்படு கின்றன," என்று திரு லீ கூறினார்.
"ஆனால் அதைச் செய்வது சரியானது என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால் இன ஒருங்கிணைப்புக் கொள்கை நம் அனைவருக்கும் பயனளிக்கிறது. மேலும் அது ஒருங்கிணைந்த சமூகத்தை வளர்க்க உதவுகிறது," என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இன ஒருங்கிணைப்புக் கொள்கை வெவ்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்தைகள், கடைத்தொகுதிகள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள் போன்ற இடங்களில் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள உதவுகிறது என்றார் அவர்.
"அக்கொள்கை சகிப்புத்தன்மை, புரிதலை வளர்ப்பதற்கும், நம்மைப் பிளவுபடுத்தும் சமூக சக்திகளை எதிர்ப்பதற்கான மனவலிமையை வழங்குகிறது. அது இல்லாவிட்டால் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் இனச்செறிவு அதிகமாகிவிடும்," என்றும் திரு லீ சொன்னார்.

