ஈராண்டுகளுக்குப் பிறகு, இந்த மாதம் 27ஆம் தேதியில் இருந்து வழக்கமான அனைத்துலக விமான சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கவிருக்கிறது.
உலகம் முழுவதும் பரவலாக கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டிருப்பதாலும் உரிய பங்காளிகளுடன் ஆலோசித்த பிறகும், அனைத்துலகப் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது என்று மத்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அனைத்துலக விமான சேவைகள் தொடர்பில் நடப்பிலுள்ள சுகாதார அமைச்சின் வழிகாட்டி நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சு கூறியிருக்கிறது.
கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் 23ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் வழக்கமான அனைத்துலக விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மீண்டும் அவற்றைத் தொடங்க திட்டமிடப்பட்டபோதும் ஓமிக்ரான் திரிபுப் பரவல் காரணமாக அது நிறுத்திவைக்கப்பட்டது.
இருதரப்பு சிறப்பு உடன்பாடுகளின்கீழ் 37 நாடுகளுக்கு 2020 ஜூலை முதல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களும் வெளிநாட்டு விமான நிறுவனங்களும் அதிகமான விமானங்களை இயக்குவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டன.
இதனால், சில குறிப்பிட்ட தடங்களில் பயணக் கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ந்துவரும் எரிபொருள் விலையாலும் உக்ரேன் நெருக்கடியாலும் அண்மைய வாரங்களாக விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்துக் கருத்துரைத்த இந்தியப் பயண முகவர் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் அனில் கல்சி, "எடுத்துக்காட்டாக, 2020 மார்ச் மாதத்திற்கு முன்பு டெல்லி-துபாய் இடையிலான இருவழி 'எக்கானமி' பயணக் கட்டணம் சராசரியாக கிட்டத்தட்ட 20,000 ரூபாயாக இருந்தது. கொவிட்-19 காலகட்டத்தில் குறைவான விமானங்களே இயக்கப்பட்டதால் அது 80,000 - 90,000 ரூபாயாக உயர்ந்தது. மார்ச் 27ஆம் தேதிக்குப்பின் அது ரூ.30,000க்குக் குறையலாம்," என்றார்.
முன்னதாக, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை (விடிஎல்) திட்டத்தின்கீழ் இந்தியா, மலேசியா, இந்தோனீசியா நாடுகளைச் சேர்ந்த அதிகமான நகரங்களில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி சிங்கப்பூர் வரலாம் என்று இம்மாதம் 4ஆம் தேதி சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது.
இப்போது சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் விடிஎல் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் அத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

