தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தரை பயணப்பாதை (விடிஎல்) வழியாக சிங்கப்பூருக்கு வர நாள்தோறும் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, வரும் திங்கட்கிழமை முதல் 2,160லிருந்து 3,420 ஆக உயர்த்தப்படும் என்று மலேசியாவின் போக்குவரத்து அமைச்சு நேற்று அறிக்கை யில் அறிவித்தது.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களில் மேலும் பலர் ஜோகூரில் இருந்து கடற்பாலம் வழியாக சிங்கப்பூர் வருவதற்கு அனுமதிக்கும் ஒரு முயற்சியாக இது இடம்பெறுகிறது.
அப்படி வருவோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்கு இதர சில கட்டுப்பாடுகளும் இருக்காது என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை ஒட்டி அதற்குத் தோதாக பேருந்து பயணச்சீட்டுகள் விற்பனை இன்று தொடங்கும் என்றும் அமைச்சு கூறியது.
டிரான்ஸ்டார் டிராவல், காஸ்வே லிங்க் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஜோகூர் பாருவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் பேருந்துச் சேவையை நடத்துகின்றன.
புறப்படுவதற்கு முன்னதாக, சிங்கப்பூர் வந்ததும் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனை உள்ளிட்ட இப்போதைய விடிஎல் தரை பயணப்பாதை நிபந்தனைகளை பயணிகள் நிறைவேற்ற வேண்டியிருக்கும்.
கொரோனா கிருமிகளுடன் வாழ வேண்டிய ஒரு கட்டத்திற்கு மலேசியா மாறுகிறது. அந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் இடம்பெறுகிறது. அதனையொட்டி அனைத்துலக விமானங்களுக்கான பல நிபந்தனைகள் தளர்த்தப்படுகின்றன.
கடற்பாலம் வழியாக பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பை இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த முறையில் உறுதிப்படுத்த சிங்கப்பூருடன் கூடிய விடிஎல் தரை பயணப்பாதை இருதரப்பு உடன்பாடு மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஏற்பாட்டை இரு நாடுகளின் அதிகாரிகள் கூட்டாக மறுபரிசீலனை செய்து தேவை எனில் புதிய அறிவிப்புகளை விடுப்பார்கள் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.