ஓமிக்ரான் அலை அதன் உச்சத்தை எட்டியதை அடுத்து நாளுக்கு நாள் சிங்கப்பூரில் பதிவாகும் புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் சரிந்து வருகின்றன. இந்நிலையில், வரும் 15ஆம் தேதிமுதல் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை சிங்கப்பூர் எளிமையாக்கவுள்ளதாக நேற்று நடைபெற்ற அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக கொவிட்-19 நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்று பிப்ரவரி 16ஆம் தேதியன்று கூறப்பட்டபோதும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததால் புதிய நடைமுறைகள் தொடங்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. சமூக ஒன்றுகூடல், முகக்கவசம் அணிதல், வேலையிட விதிமுறைகள், பாதுகாப்பு இடைவெளி, மக்கள் கூடும் எண்ணிக்கைக்கு வரம்பு ஆகிய ஐந்து அம்சங்கள் தொடர்பில் இந்த நடைமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கொள்ளைநோய் சூழலில் மாற்றம் ஏற்பட்டால் இந்த ஐந்து அம்சங்கள் தொடர்பான நடைமுறைகள் கடுமையாக்கப்படலாம் அல்லது தளர்த்தப்படலாம்.
இந்த மாற்றங்கள், பரந்த அளவில் விதிமுறைகளைத் தளர்த்துவது ஆகாது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று வலியுறுத்தினார்.
வர்த்தகங்களும் தனிநபர்களும் விதிமுறைகளை எளிதில் புரிந்துகொண்டு பொறுப்புணர்வுடன் செயல்படுவதை ஊக்குவிக்கவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 26ஆம் தேதியன்று 18,300 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இந்த உச்சத்தை எட்டிய பின், சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து நேற்று முன்தினம் 16,300 எனப் பதிவாகியதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சொன்னார். வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் 0.93ஆக உள்ள நிலையில் நான்கு, ஐந்து வாரங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஒன்றுகூடல்களில் தொடர்ந்து ஐவர் மட்டுமே கலந்துகொள்ளலாம். ஆனால், வீட்டிற்கு ஒரு சமயத்தில் ஐந்து விருந்தினர் வரை வந்து போன பிறகு அடுத்த ஐவர் வர இயலும். முன்னதாக ஒரு நாளில் ஐவர் மட்டுமே விருந்தினராகச் செல்ல முடியும்.
முகக்கவசம் அணிந்திருக்கும் நிலையில், பாதுகாப்பு இடைவெளி தேவைப்படாது. தேவை ஏற்படின், ஒரு மீட்டர் இடைவெளி விடுவது கடைப்பிடிக்கப்படும்.
ஊழியர்களை நிறுவனங்கள் வெவ்வேறு அலுவலகங்களில் அமர்த்தலாம். அத்துடன் ஐவர் கொண்ட வேலையிடச் சமூக ஒன்றுகூடல்கள் மீண்டும் தொடங்கலாம். குறிப்பிட்ட சில விளையாட்டு இடங்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 பேர் வரை, குழு விளையாட்டுகளில் பங்கேற்கலாம். சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள், திருமண விருந்துகள் போன்றவற்றில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையில் முன்னதாக விதிக்கப்பட்ட வரம்பு, இனி நீக்கப்படுகிறது. இருப்பினும் 1,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடிய பெரிதளவிலான நிகழ்ச்சிகளில் 50 விழுக்காட்டினர் மட்டுமே கலந்துகொள்ளலாம்.
கூடுதல் செய்தி - பக்கம் 2

