அலை அலையாக ரஷ்யத் தாக்குதல்களுக்குத் தயாராகும் உக்ரேன்

அலை அலையாக ரஷ்யத் தாக்குதல்களுக்குத் தயாராகும் உக்ரேன்

1 mins read
33b8cc8c-96f6-4d12-8712-ba738d14c0d0
படம்: ஏஎஃப்பி -

உக்ரேனின் கியவ், கார்கிவ், டான்பாஸ் பகுதிகளில் புதிய ரஷ்யத் தாக்குதல்களுக்கு உக்ரேன் தயாராகி வருகிறது.

கருங்கடல் அருகே ஏறக்குறைய 500,000 பேர் வசிக்கும் துறைமுக நகரான மைகொலைவில் ரஷ்ய, உக்ரேனிய படைகளுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது.

முன்னதாக, ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் மைகொலைவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு வசிப்போர் பாதுகாப்பான இடங்களுள் தஞ்சம் அடைந்தனர்.

உக்ரேனியத் தலைநகர் கியவைச் சுற்றிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கியவுக்கு வடமேற்கில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இர்பின் பகுதியிலும் கடுமையான சண்டை நிலவுகிறது.

கியவுக்கு வடகிழக்கே உள்ள பகுதிகளிலும் ரஷ்யப் படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

தென்கிழக்கு துறைமுக நகரான மரியபோலில் குடிமக்கள் 80 பேர் தஞ்சம் அடைந்திருந்த பள்ளிவாசல் ஒன்றையும் ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (மார்ச் 12) தெரிவித்தது.

இதற்கிடையே, ரஷ்யத் தாக்குதலில் அண்டை நாடான பெலருசும் இணையும் என்று உக்ரேன் எதிர்பார்க்கவில்லை என்று உக்ரேனிய அதிபர் தரப்பில் கூறப்பட்டது.