உக்ரேன் தலைநகர் கியவ்வுக்கு வடமேற்கே உக்ரேன் - ரஷ்யப் படைகளுக்கு இடையே கடும் சண்டை நடந்து வருவதாக பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சுத் தகவல்கூறுகிறது.
கியவ் நகரின் மையப்பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யப் படைகளின் பெரும்பகுதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மற்ற பல நகரங்கள் முற்றுகையிடப்பட்டு, குண்டுமழையில் சிக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தென்கிழக்குத் துறைமுக நகரான மரியபோலில் ரஷ்யத் தாக்குதலாலும் 12 நாள் முற்றுகையாலும் பொதுமக்களில் குறைந்தது 1,582 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நகர மன்றம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும்படி நேற்றுக் காலையிலும் உக்ரேனின் பல நகரங்களில் வான்வழி தாக்குதல் அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.
இந்நிலையில், பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ரஷ்ய ராணுவம் இந்தப் போரில் பேரிழப்பைச் சந்தித்துள்ளதாக உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் மீண்டும் ஒன்றுதிரட்டப்படுவதுபோல் தெரிகிறது என்றும் அடுத்த சில நாள்களில் கியவ் நகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கியவ், கார்கிவ், டோன்பாஸ் பகுதிகளில் ரஷ்யா புதிதாகத் தாக்குதலில் இறங்கலாம் என எதிர்பார்ப்பதாக ஒலெக்சி அரெஸ்டோவிச் எனும் உக்ரேனிய உயரதிகாரி கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், பெலருஸ் ராணுவம் ரஷ்யப் படையுடன் கைகோக்காது என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பெலருசின் எல்லைப்பகுதி கிராமங்கள்மீது வான்வெளியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ரஷ்யாமீது உக்ரேன் குற்றம் சுமத்தியிருந்தது. "போரில் பெலருஸ் ராணுவத்தையும் பங்கேற்கச் செய்வதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தூண்டுதல் நடவடிக்கை இது," என்று உக்ரேன் விமானப்படை சாடியிருந்தது. இக்குற்றச்சாட்டிற்கு ரஷ்யா பதிலேதும் கூறவில்லை.
இதற்கிடையே, ரஷ்யப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட மெலிட்டாபோல் நகர மேயரை உடனே விடுவிக்கும்படி அதிபர் ஸெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

