உக்ரேனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா, உக்ரேன், போலந்து எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள உக்ரேனின் ஆகப் பெரிய ராணுவ நிலை மீது நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
உக்ரேன் மீது ரஷ்யா படைஎடுத்தது முதல் இந்த அளவுக்கு பெரிய தாக்குதல் இதுவரை நடந்ததாக தெரியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
ராணுவ தளம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 57 பேர் காயமடைந்தனர் என்று அந்த வட்டார உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய விமானங்கள் லிவிவ் என்ற நகரில் உள்ள அந்தத் தளத்தில் 30 எறிபடைகளைப் பாய்ச்சியதாக வட்டார ஆளுநர் மாக்சிம் கோசிட்ஸ்கி கூறினார்.
அந்த ராணுவ தளத்தில் வெளிநாட்டு ராணுவப் பயிற்றுவிப்பாளர்கள் முன்பு பணியாற்றி வந்தார்கள். தாக்குதல் நடந்தபோது அங்கு வெளிநாட்டினர் யாராவது இருந்தார்களா என்பதைக் கண்டறிய தாங்கள் முயன்று வருவதாக உக்ரேனிய தற்காப்பு அமைச்சு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
தாக்கப்பட்ட ராணுவத் தளம் உக்ரேனின் மேற்குப் பகுதியில் உள்ள ஆகப் பெரிய ராணுவ முகாமாகும். அது நேட்டோ நாடான போலந்துடன் கூடிய எல்லையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உக்ரேனில் அமைந்து இருக்கிறது.
ரஷ்யப் படையெடுப்புக்கு முன்பு அந்தப் பகுதியில் நேட்டோ நாடு களுடன் சேர்ந்து உக்ரேன் பல போர்ப் பயிற்சிகளை நடத்தி இருக்கிறது. உக்ரேனில் தொடர்ந்து 18வது நாளாக போர் தொடுத்துள்ள ரஷ்யா, பல பகுதிகளிலும் பல ஊர்களிலும் பல நகர்களிலும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இர்பின் என்ற நகரில் தெருவெங்கும் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நடப்பதாக நேற்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இவ்வேளையில், தலைநகரை ஆக்கிரமிக்க முயலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
தலைநகரை ஆக்கிரமிக்க முயன்றால் ரஷ்யப் படைகளுக்கு மரணம்தான் மிஞ்சும் என்று அவர் எச்சரித்தார். "எங்கள் மீது படைஎடுத்து இந்த வட்டாரத்தின் வரலாற்றை அழித்து, எங்கள் அனைவரையும் துடைத்தொழித்த பிறகுதான் தலைநகரில் ரஷ்யப் படைகள் நுழைய முடியும்.
"வந்து பார்க்கட்டும், அப்படி நுழையும் ரஷ்ய படையினருக்கு இந்த மண்ணில் மரணம்தான் மிஞ்சும்," என்று கடுமையாக அதிபர் ஸெலென்ஸ்கி எச்சரித்தார்.
அதேவேளையில், நேற்று அதிகாலையில் தலைநகர் எங்கும் எச்சரிக்கை சங்கொலியைக் கேட்க முடிந்ததாக தகவல்கள் கூறின.
உக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல் காரணமாக பல நகரங்கள் முற்றுகைக்கு இலக்காகிவிட்டன.
ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 2.5 மில்லியன் மக்கள் பக்கத்து நாடுகளுக்கு ஓடி இருக்கிறார்கள்.
தலைநகர் கியவ் அருகே தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடிய மாதர்களையும் சிறார்களையும் தாக்கி ஏழு பேரை ரஷ்ய படைகள் கொன்றுவிட்டதாக உக்ரேன் நேற்றுக் குற்றம் சாட்டியது.
இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அமைதிக்குத் தயாராக இல்லை என்றே தெரிவதாக பிரான்ஸ் கூறியது.
பக்கம் 8ல் மேலும் செய்தி

