புவாங்காக் வட்டாரத்தில் நேற்று பிற்பகல் வாளை ஏந்தி அங்கிருந்தவர்களை மிரட்டிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தல், தாக்குதலுக்கு பயன்படும் ஆயுதத்தை வைத்திருந்தது ஆகியவற்றுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினர் விடுத்த அறிக்கையில் இதைத் தெரிவித்தனர்.
புவாங்காக் ஸ்குவேர் கடைத்தொகுதி அருகே ஆடவர் ஒருவர் வாளை வைத்திருந்தார் என்று பிற்பகல் 1.55 மணியளவில் உதவி கோரி காவல்துறையினருக்கு அழைப்பு வந்தது.
பொதுமக்களை நோக்கி அந்த ஆடவர் வாளை வீசியபடி இருந்தார் என்றும் வாளால் குறைந்தது மூன்று கார்களை அவர் சேதப்படுத்தினார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் ஐந்து பேர் ஆடவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
பொதுமக்கள் இருவருக்கும் வாளை வைத்திருந்த அந்த ஆடவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
அந்த வாளைக் காவல்துறையினர் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், பொதுமக்களையும் அவ்வழியாகச் சென்ற கார்களையும் நோக்கி அந்த ஆடவர் வாளை வீசியபடி மிரட்டுவதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
கையில் வாளை வைத்திருந்தபடி சாலை நடுவே நடந்து சென்ற அந்த ஆடவர், அவ்வழியாகச் சென்ற குறைந்தது மூன்று கார்களை வாளால் தாக்கும் காட்சி காணொளியில் இடம்பெற்றது.
பின்னர், சாலையைக் கடக்க காத்திருந்தவர்களை நோக்கிச் சென்ற அவர், அவர்களில் ஒருவரைத் தாக்க முயன்றபோது தடுமாறி விழுந்தார்.
அவர் தாக்கவிருந்த நபர், அவரை பலவந்தமாகப் பிடித்து அடக்க முயன்றார். உடனே மேலும் சிலர் அங்கு வந்து அந்த ஆடவரைக் கட்டுப்படுத்த உதவினர்.
பொது இடங்களில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு மூவாண்டுகள் வரை சிறை தண்டனையும் குறைந்தது ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
வன்முறையில் ஈடுபடும் நோக்கத்துடன் அச்சுறுத்தும் நபருக்கு, ஈராண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

