சிங்கப்பூரில் வேலையில்லாத ஒவ்வொரு நபருக்கும் இரண்டுக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளன.
மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட 2021க்கான தொழிலாளர் சந்தை அறிக்கையில், கடந்த டிசம்பரில் 117,100 காலிப் பணியிடங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேலையில்லாத 100 பேருக்கு 211 காலிப் பணி இடங்கள் உள்ளன. ஒப்புநோக்க, கடந்த ஆண்டு செப்டம்பரில், வேலையில்லாத 100 பேருக்கு 195க்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் இருந்தன.
கொவிட்-19 சூழல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன. இதனால் வெளிநாட்டு ஊழியர்களின் வருகை குறைந்ததால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து பொருளியல் மீட்சியடைந்து வரும் வேளையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை மனிதவள அமைச்சு சுட்டியது.
வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்துள்ள உற்பத்தி, கட்டுமானத் துறைகள், மொத்த காலிப் பணியிடங்களில் 23 விழுக்காடு பங்கு வகித்தன.
கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, சிங்கப்பூர்வாசிகள் அல்லாதோரிடையே வேலை நியமன விகிதம், கொவிட்-19க்கு முந்தைய சூழலில் இருந்த அளவைவிட குறைவாக இருப்பதையும் அமைச்சு சுட்டியது.
"என்றாலும், பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், சிங்கப்பூர்வாசி அல்லாதோரிடையே வேலை நியமனம் இவ்வாண்டு அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனுடன், வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்கும் துறைகளில் காலிப் பணியிடங்கள் குறையக்கூடும்," என்று அமைச்சு விவரித்தது.

