ஜூரோங் லேக் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த சுற்றுப்பயணத் தலத்தைக் கட்ட அழைப்பு

ஜூரோங் லேக் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த சுற்றுப்பயணத் தலத்தைக் கட்ட அழைப்பு

1 mins read
aca1e928-0301-4848-8533-c726d09817c6
ஓவியர் கற்பனையில் ஜூரோங் லேக் வட்டாரத்தில் கட்டப்படவுள்ள சுற்றுப்பயணத் தலம். படம்: சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் -

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், ஜூரோங் லேக் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த சுற்றுப்பயணத் தலத்தைக் கட்டி நடத்துவதற்கான குத்தகைத் திட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பயணத்துறைக் கழகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) அன்று அது குறித்து அறிக்கை விடுத்தது.

அந்த வாழ்க்கைமுறை, சுற்றுப்பயண மையத்தில் உயர்தர தங்குவசதிகள் உள்ள ஹோட்டல் அமையவுள்ளது. அந்த ஹோட்டலில் 350 அறைகள் இருக்கும்.

அத்துடன் கவர்ச்சித் தலங்கள், சில்லறை வர்த்தகம், உணவு, பானம், பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும்.

அந்த மேம்பாட்டுத் திட்டம், தொழில்நுட்பம், கல்விசார்ந்த பொழுதுபோக்கு, நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று கழகம் கூறியது.

ஜூரோங் லேக் பூங்கா, புதிய அறிவியல் நிலையம் போன்ற அருகில் உள்ள கவர்ச்சித் தலங்களுக்கு முழுமைதரும் வகையில் புதிய திட்டம் இருக்க வேண்டும்.

அத்துடன், நடைபயணிகளுக்கு ஏற்ற சாலைகள், நல்ல வடிவமைப்புள்ள பொது இடங்கள் போன்றவற்றையும் அது பெறவேண்டும். ஜூரோங் லேக் வட்டாரம் முழுவதுடன் அது நன்கு ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கழகம் கூறியது.

2028க்குப் பிறகு புதிய தலம் கட்டி முடிக்கப்படும் என்று கழகம் எதிர்பார்க்கிறது.

ஜூரோங் ஏரி அருகில் 6.8 ஹெக்டர் பரப்புள்ள இடத்தில் வாழ்க்கைமுறை, சுற்றுப்பயண மையத்தைத் கட்டும் திட்டம் இருப்பதாக கழகம் 2019ல் தெரிவித்தது.