கி.ஜனார்த்தனன்
புவாங்கோக் கிரெசண்ட் வட்டாரத்தின் போக்குவரத்து சாலை சந்திப்பில் காத்திருந்த 35 வயது அமிலா சிந்தானாவை, வாள் வைத்திருந்த ஆடவர் திடீரெனத் தாக்கினார்.
விநியோக சேவை நிறுவன உரிமையாளரான திரு சிந்தானாவை நோக்கி ஆடவர் வாளை வீசியதில் தோள், கை, கழுத்துப்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டத்துடன் உடம்பெங்கும் கீறல்களும் ஏற்பட்டன. நல்லவேளையாக அந்த ஆடவர் வழுக்கி விழுந்தார். உடனே சிந்தானாவும் வழிப்போக்கர்கள் ஐவரும் போலிசார் வரும்வரையில் அந்த ஆடவரைக் கீழே அழுத்திப் பிடித்து, செயல்படாமல் தடுத்தனர்.
இச்செயலைப் பாராட்டி சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று இவர்களுக்கு பொது உணர்வு விருதை வழங்கியது.
ஃபடில் யூசோப் என்ற 37 வயது ஆடவர், வீட்டிலிருந்து கிளம்பும் முன் சில மருந்துகளை உண்டதாக ஆரம்பகட்ட விசாரணை தெரிவித்தது. சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை வாளால் அடித்துக்கொண்டிருந்ததைக் கைப்பேசியில் காணொளி எடுத்தார் அந்த வழியே வந்த திரு சிந்தானா. அதனால் ஆத்திரமடைந்த ஃபடில், திரு சிந்தானாவைத் தாக்க முற்பட்டார். ஃபடில் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லிக்கொண்டே ஃபடில் சாலையில் நடந்து சென்றுள்ளார். ஃபடில் தனியாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. இது பயங்கரவாதச் செயல் அல்ல என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை கூறியது.

