வாளைக் கொண்டு தாக்கியவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வாளைக் கொண்டு தாக்கியவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

2 mins read
62369f84-f46d-49fa-ae4e-14a507edc6dc
ROADS.SG/ஃபேஸ்புக், வாட்ஸ்அப் காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் -

புவாங்காக் ஸ்குவேர் கடைத்தொகுதி அருகே பாதசாரிகளிடமும் கார்களிடமும் வாளை வீசியபடி இருந்த ஆடவர் ஒருவர் மீது புதன்கிழமை (மார்ச் 16) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சமுராய் வாளைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஃபடில் யூசோப் எனும் அந்த 37 வயது ஆடவர் காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

திரு அமிலா சிந்தானா என்பவரை மூன்று முறை வாளால் தாக்கியதாக சிங்கப்பூரரான ஃபடில் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (மார்ச் 14) நிகழ்ந்த இச்சம்பவத்தில் திரு சிந்தானாவின் இடது கை, தோள்பட்டையில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

ஃபடில், வாளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, தெரியாத சில மாத்திரைகளை அவர் உட்கொண்டதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

அவர் வசித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் மின்தூக்கித் தளத்தில் பொதுமக்கள் சிலருடன் தகராறில் ஈடுபட்டிருந்தார்.

"பின்னர், கண்மூடித்தனமாக சாலையைக் கடந்த அவர், வாளைக் கொண்டு அவ்வழியாகச் சென்ற ஐந்து கார்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது," என்று காவல்துறை குறிப்பிட்டது.

புவாங்காக் ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு முன்னால் உள்ள போக்குவரத்துச் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த திரு சிந்தானா மீது ஃபடில் வாளை வீசியதாகவும் கூறப்படுகிறது. திரு சிந்தானாவை எதிர்கொண்டபோது ஃபடில் தரையில் வழுக்கியதைச் சாதகமாகப் பயன்படுத்திய திரு சிந்தானா, அவரைக் கீழே அழுத்திப் பிடித்து கட்டுப்படுத்தினார்.

இச்சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் சிலர் விரைந்து வந்து, காவல்துறையினர் வரும்வரை ஃபடிலைக் கட்டுப்படுத்த உதவினர்.

இந்தச் சம்பவத்தில் வேறோர் ஆடவருக்கு முட்டிப் பகுதியில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.

ஃபடிலுடைய செயல், பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஃபடில் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இரு பாக்கெட்டுகள் மஞ்சள் மாத்திரைகளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ஃபடில், மனநலப் பரிசோதனைக்காக சாங்கி சிறைச்சாலை காம்பிளெக்ஸ் மருத்துவ மையத்தில் மூன்று வாரங்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்படுவார்.

அவரது வழக்கு ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.